Mumbai Indians vs Sunrisers Hyderabad: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் (IPL 2025) தற்போது வேகமெடுத்திருக்கிறது. தினந்தினம் பரபரப்பான போட்டிகளை வெவ்வேறு வடிவில் கண்டு வருகிறோம் எனலாம்.
IPL 2025: கடந்த 4 நாள்களும் ருசியான விருந்து
ஏப். 13இல் டெல்லி அணிக்கு எதிராக ஹாட்ரிக் ரன்அவுட் மூலம் மும்பை வெற்றி, ஏப். 14இல் லக்னோவுக்கு எதிராக தோனியின் பிஷினிங் உடன் சிஎஸ்கே வெற்றி, ஏப். 15இல் கேகேஆர் அணிக்கு எதிராக ஐபிஎல் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோரை டிஃபண்ட் செய்து பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி, ஏப். 16இல் (நேற்று) 4 வருடங்களுக்கு பின் நிகழ்ந்த சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி வெற்றி என கடந்த நான்கு நாள்கள் நடந்த போட்டி அனைத்தும் ரசிகர்களுக்கு ருசியான விருந்தை கொடுத்திருக்கிறது எனலாம்.
MI vs SRH: இன்று ரன்வேட்டை நிச்சயம்
இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்றிரவும் ஐபிஎல் ரசிகர்களுக்கு பெரிய அதிரடி விருந்தே காத்திருக்கிறது எனலாம். மும்பை வான்கடே மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவின் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (MI vs SRH) மோத இருக்கிறது. பேட்டர்களுக்கு அதிகமாக சாதகமளிக்கும் வான்கடே மைதானத்தில் பேட்டிங்கில் அசுர பலம் கொண்ட இரு அணிகள் மோதகிறது என்பதால் ரன்வேட்டை நிச்சயம்.
MI vs SRH: மும்பையின் மிரட்டல் பேட்டிங் ஆர்டர்
மும்பை இந்தியன்ஸ் அணியை எடுத்துக்கொண்டால், தொடரின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்தாலும் பும்ராவின் வருகை அவர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்திருப்பதை பார்க்க முடிகிறது. பேட்டிங்கில் சில பிரச்னை இருந்தாலும் நிச்சயம் 200+ ரன்களை அடிக்கும் திறன் கொண்ட அணியாகவே காட்சியளிக்கிறது. ரோஹித் சர்மாவுக்கும், ரியான் ரிக்கில்டனுக்கும் இந்த போட்டியில் அடித்தே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
நம்பர் 3 மற்றும் நம்பர் 4 இடங்களில் நிச்சய் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர்தான் வர வேண்டும். இவர்களை பற்றி சொல்லவே தேவையில்லை. அந்த ரிட்டயர்ட் அவுட் சம்பவத்திற்கு பின் திலக் வர்மாவும் வெறிகொண்டு ரன்களை சேர்த்து வருகிறார். அதேநேரத்தில் இந்த பேட்டிங் ஆர்டரில் நம்பர் 5, நம்பர் 6இல் தான் வில் ஜாக்ஸ் வருகிறார். இது சரியான முடிவாக தெரியவில்லை. அவருக்கு பதில் பெவன் ஜேக்கப்ஸை மும்பை அணி கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
MI vs SRH: பந்துவீச்சிலும் சிக்கல் இல்லை
ஹர்திக் பாண்டியா, நமன் திர், மிட்செல் சான்ட்னர் என பெரிய பேட்டிங் லைன்அப் இருக்கிறது. பும்ரா, போல்ட், சஹார் என மிரட்டலான வேகப்பந்துவீச்சு யூனிட் இருக்கிறது. சான்டனருடன் கடந்த போட்டியில் கரன் சர்மாவும் சிறப்பாக வீசினார். தேவைப்பட்டால் கரனுக்கு பதில் விக்னேஷ் புத்தூரை கொண்டுவரலாம்.
MI vs SRH: ஆட்டம் காட்டுவாரா அபிஷேக் சர்மா?
மறுபுறம் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை மட்டுமே நம்பி களம் இறங்குகிறது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகெத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ் என நம்பர் 8 வரை பேட்டிங் சிறப்பாக உள்ளது. ஷீஷன் அன்சாரி, ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி என பந்துவீச்சு படை ஓரளவு சுமாராக காட்சியளிக்கிறது. இவர்கள் வான்கடேவில் தாக்கத்தை ஏற்படுத்துவார்களா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஆனால், கடந்த போட்டியில் உள்ள வந்த இஷன் மலிங்கா நிச்சயம் அந்த அணிக்கு டெத் ஓவர்களில் பயனளிப்பார் எனலாம்.
MI vs SRH: இன்றாவது 300 ரன்கள் வருமா?
அந்த வகையில் இரு அணிகளும் சமநிலையில் இருக்கும் நிலையில் புள்ளிப்பட்டியலில் மும்பை 7வது இடத்திலும், சன்ரைசர்ஸ் 9வது இடத்திலும் உள்ளன. 300 ரன்கள் இப்போ வந்துவிடும், அப்போ வந்துவிடும் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தொடர் தோல்விகள் அவர்களுக்கு பின்னடைவு ஏற்படுத்தியது. இருப்பினும், வான்கடே போன்ற சின்ன மைதானத்தில் ஹெட் – அபிஷேக் சர்மா கடந்த போட்டியை போல் செட்டாகிவிட்டால் நிச்சயம் மும்பை பௌலர்கள் காலி எனலாம்.
இஷான் கிஷனுக்கு இங்கு கடந்த 7 சீசன்களாக விளையாடிய அனுபவமும் உள்ளது. மும்பை பௌலர்கள் பலரை அவர் வலைப்பயிற்சியிலும் எதிர்கொண்டிருப்பார். எனவே அவர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. நிதிஷ், அனிகேத், அபினவ் மூன்று பேரும் ஸ்கோரை வேற லெவலுக்கு எடுத்துச் செல்வதை மட்டுமே நோக்கமாக வைத்து களமிறங்குவார்கள் எனலாம். பாட் கம்மின்ஸ் சூப்பரான ஃபினிஷிங்கை கொடுப்பார். ஆனால், பந்துவீச்சு மட்டுமே அவர்களுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.
MI vs SRH: மான்கொம்பு ஃபைட்டுக்கு ரெடியா?
அந்த வகையில், எந்த அணியில் பேட்டிங் பவர்பிளேவில் அதிகமான ரன்களை அடித்து, பந்துவீச்சு டெத் ஓவரில் குறைவான ரன்களை கொடுக்கிறதோ அந்த அணிதான் இன்று வெற்றிபெறும். ஐபிஎல் ரசிகர்களே இன்றிரவு ரெடியா இருங்க… நிச்சயம் மான் கொம்பு ஃபைட் இருக்கு…