விழுப்புரம்: மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலில் 22 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மேல்பாதி திரவுபதி அம்மன் திருக்கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வது தொடர்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி வருவாய்த்துறையினரால் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட திரௌபதி அம்மன் திருக்கோயிலை மீண்டும் திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, ஒரு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் விசாரணையை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், “திரவுபதி அம்மன் கோயிலைத் திறந்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் ஒருகாலப் பூஜையை மட்டும் நடத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டதன் பேரில், 2024-ம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி கோயில் திறக்கப்பட்டு, ஒருகாலப் பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், வருவாய்க் கோட்டாட்சியரால் போட்டப்பட்ட 145 தடை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்ற உத்தரவையும் பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் பங்கேற்ற இரு சமுதாயத்தினரும் கோயிலைத் திறந்து தரிசனம் செய்வது தொடர்பாக சமாதானம் செய்வதாக ஒப்புக் கொண்டனர். நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நடந்து கொள்வதாகவும், யாரையும் தடை செய்ய மாட்டோம் எனத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் முருகேசன் கூறியது, ‘கடந்த 2 ஆண்டுகளாக கோயில் பக்தர்கள் தரிசனமின்றி பூட்டிக் கிடப்பதால், கோயில் வளாகத்திலுள்ள முள்புதர்களை அகற்றி தூய்மை செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும், கோயில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டியிருப்பதாலும் சில நாள்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது’ என்றார்.
இதனை தொடர்ந்து கோயிலை சுற்றி 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி முடிவடைந்தது. இப்பணிகள் முடிவடைந்தால் இன்று காலை 6 மணிக்கு எஸ்பி சரவணன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புடன், வருவாய்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் முன்னிலையில் அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதித்தனர்.
இன்று காலை தர்மராஜா திரவுளபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பொதுமக்கள் உள்ளே சென்று வழிபாடு நடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து காலை 6 மணி முதல் கோயிலுக்குள் சென்று பொதுமக்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதன் காரணமாக கோயிலை சுற்றிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோயில் திறக்கப்பட்டதாகவும், கோயிலுக்குள் சென்று யார் வேண்டுமானாலும் வழிபாடு நடத்தலாம் என்றும் வருவாய் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தனர். ஆனால் வழிபாடு நடத்த ஒரு சமூகமக்கள் யாரும் கோயிலுக்கு வரவில்லை. 22 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டிற்காக திறக்கப்படும் கோயில் நல்ல நாள் பார்த்து திறக்காமல், ஏனோ தானோ என்று இன்று திடீரென வழிபாட்டிற்கு கோயில் திறக்கப்படுவதாகவும், வருவாய் துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதாகவும் கூறி ஊர் தரப்பு பொதுமக்கள் இன்று வழிபாடு நடத்த வரவில்லை.
வெள்ளிக்கிழமையான நாளைய தினம் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த உள்ளதாகவும் ஊர் தரப்பு மக்கள் அறிவித்துள்ளனர். அதே சமயம் மேல்பாதி கிராமத்தில் உள்ள பட்டியலினத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் சென்று திரவுபதி அம்மனை தரிசனம் செய்தனர்.
22 மாதங்களுக்கு பிறகு கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த அனைத்து தரப்பு மக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் மேல்பாதி கிராமத்திற்குள் செல்லும் அனைத்து நுழைவு வாயில்களிலும் தடுப்புகளை அமைத்து வெளி ஆட்கள் கிராமத்திற்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர். கடந்த 2022ம் ஆண்டு 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தர்மர் பட்டாபிஷேக விழாவை ஊர் கூடி யானை, குதிரை பரிவாரங்களுடன் இவ்விழாவை நடத்தியது குறிப்பிடத்தக்கது.