புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவால் பணியினை இழந்த முறைகேடு புகாரில் சிக்காத மேற்கு வங்க ஆசிரியர்கள் பணிகளில் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதேபோல், புதிய ஆசிரியர்களின் நியமனங்களை டிச.31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு, “தற்போதைய மனுவில் உள்ள கோரிக்கைகள், 9, 10, 11 மற்றும் 12 வகுப்புகளின் ஆசிரியர்கள் தொடர்புடையதாக இருப்பதால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ள விரும்புகிறோம். புதிய ஆசிரியர் நியமனங்களுக்கான விளம்பரம் மே 31-ம் தேதி வெளியிடப்பட்டு, தேர்வு, நியமனம் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
மேற்கு வங்க அரசும், பணியாளர்கள் ஆணையமும் மே 31-ம் தேதிக்குள் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவேண்டும். அதில், பணி நியமனத்துக்கான விளம்பரம், அதேபோல் ஆசிரியர்கள் நியமனம் டிச.31-ம் தேதிக்குள் நிறைவடைவதை உறுதி செய்யும் அட்டவணை உள்ளிட்டவை இணைக்கப்பட வேண்டும். உத்தரவு படி விளம்பரம் வெளியிடப்படாவிட்டால், தண்டனை விதிப்பது உள்ளிட்ட பொருத்தமான உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று தெரிவித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு உதவி ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏனெனில் குருப் சி மற்றும் டி பிரிவுகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. முன்னதாக, ஏப்ரல் 3ம் தேதி உச்சநீதிமன்றம், கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முறைகேடான முறையில் ஆசிரியர் நியமனங்கள் நடந்திருப்பதால் இது மோசடிக்குச் சமம் என்று தெரிவித்திருந்தது. நீதிபதிகள் கூறுகையில், “முறைகேடாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிடுவதற்கு சரியான காரணம் எதையும் நாங்கள் இதில் காணவில்லை. பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டிருப்பதால் இது ஒரு மோசடியாகும்.” என்று தெரிவித்திருந்தது.
இதனிடையே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினைத் தொடர்ந்து, கடந்த வாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தின் உத்தரவால் வேலையிழந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களைச் சந்தித்தார். அப்போது ஆசிரியர்களுக்கான தனது ஆதரவினை உறுதி செய்தார். “வேலையிழந்த ஆசிரியர்களுடன் நான் துணை நிற்கிறேன். அவர்களின் கண்ணியத்தை காக்க என்னாலான அனைத்தையும் செய்வேன்.” என்று தெரிவித்திருந்தார்.