சென்னை: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “வக்பு திருத்தச் சட்டம், 2025ஐ எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் தாக்கல் செய்த மனுவை மற்ற மனுக்களுடன் சேர்த்து விசாரித்ததற்கும், வக்பு சொத்துகளைப் பாதுகாப்பதற்கும், வக்பு வாரியங்கள் அல்லது கவுன்சில்களில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிப்பதைத் தடுப்பதற்குமான இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததற்காக மாண்பமை உச்ச நீதிமன்றத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முஸ்லிம் சமூகத்தின் அறக்கட்டளைகள் மற்றும் முக்கிய மத நடைமுறைகளின் நிர்வாகத்தில் தலையிடுவதன் மூலம், அவர்களைக் குறிவைத்து தாக்கும் ஒரே நோக்கத்துடன், இந்த தீய சட்டத் திருத்தம் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.
நாங்கள் சுட்டிக்காட்டியபடி, இந்த திருத்தச் சட்டத்தின் பல பிற்போக்குத்தனமான விதிகளை நீதித்துறையின் மறு ஆய்வு செய்து மட்டுப்படுத்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது சிறுபான்மைச் சகோதரர்களுக்கு அரசியலமைப்பு அளித்துள்ள உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.