மும்பை,
நடப்பு ஐ.பி.எல். தொடரில் வழக்கத்திற்கு மாறாக நடுவர்கள் திடீரென வீரர்கள் பயன்படுத்திய பேட்டை சோதனை செய்து வருகின்றனர். இதற்கான காரணம் என்னவெனில், வீரர்கள் பயன்படுத்தும் பேட்டின் அகலம், நீளம், உள்ளிட்ட வடிவமைப்பு ஐ.பி.எல். விதிமுறைக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை சிறிய கையடக்க அளவுகோல் மூலம் சரிபார்த்து வருகின்றனர்.
இந்த விதிப்படி வீரர்கள் பயன்படுத்தும் பேட்டின் அளவு அகலம்: 4.25 அங்குலம் நீளம்: 2.64 அங்குலம் மற்றும் விளிம்புகள்: 1.56 அங்குலம் என்ற அளவில்தான் இருக்க வேண்டும். இதனை உறுதி செய்யும் வகையில் நேற்றைய போட்டிகளில் நடுவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இனி வரும் அனைத்து போட்டிகளிலும் இது கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஐதராபாத் அணியின் பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி சில கருத்துகளை கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “நான் விளையாடிய கால கட்டங்களில் பேட்களை சரிபார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நடுவர்கள் வழக்கமாகவே டிரஸ்ஸிங் அறைகளுக்கு வந்து பேட்களை சரிபார்ப்பார்கள் என்பதால் இந்த சோதனைகள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன். வீரர்கள் தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
நடுவர்களும் வீரர்கள் ஓய்வறைக்கு வந்து நிறைய நேரம் பார்ப்பார்கள். அதனால் அவர்களின் பேட் பெரும்பாலும் சரியான அளவில் இருக்கும் என்பது நடுவர்களுக்கு தெரியும். இச்சோதனையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. ஆனால் இதனையும் மீறி பேட்டை எடுத்து செல்வது மிகவும் எளிது. எடை அதிகரிக்காமல் பேட்கள் பெரிதாகி வருகின்றன. இது உற்பத்தியாளர்களின் திறமையை காட்டுகிறது. இந்த கால கட்டத்தில் பேட்ஸ்மேன்களின் தேவைக்கேற்ப பேட்கள் தயாரிக்கப்படுகின்றன.
“இது விளையாட்டின் ஒரு பகுதி மற்றும் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதி. அனைவரும் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் ரசிப்பதாக தெரிகிறது. எனவே நாம் பேட் அளவில் குறைப்பைப் பெறப் போகிறோம் என்று நான் நினைக்கவில்லை. அது எனக்கு உண்மையில் கவலை அளிக்கவில்லை” என்று கூறினார்.