சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஹிட் அடித்த ‘நாடோடிகள்’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை அபிநயா. மாடலாக இருந்த அவர், தெலுங்கு திரையுலகில் 2008ம் ஆண்டு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அறிமுகமானார். தமிழில் நல்ல வரவேற்புக் கிடைக்க ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ஈசன்’, ‘7ஆம் அறிவு’, ‘வீரம்’, ‘பூஜை’, ‘மார்க் ஆண்டனி’ எனப் பல திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.

சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் மலையாளத்தில் அவர் நடித்த ‘பனி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர்.
கேட்கும், பேசும் திறன் சவால் கொண்டவராக இருந்தாலும் தனது நடிப்புத் திறமையால் தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிறார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில், தான் 15 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருவதாகக் கூறியிருந்தார். பள்ளி பருவத்திலிருந்தே இருவரும் நண்பர்களாகப் பழகி, பிறகு காதலர்களாக கரம் கோத்தனர். அந்த நீண்ட நாள் காதலரான தன்னுடைய நண்பரும் தொழிலதிபருமான வகிசனா கார்த்திக் என்பவரை நேற்று (ஏப்ரல் 16ம் தேதி) திருமணம் செய்து கொண்டார் அபிநயா.
வாழ்த்துகள் அபிநயா – வகிசனா கார்த்திக்