ஐபிஎல்லில் ஒவ்வொரு சீசனிலும் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை இதுவரை வென்ற 9 இந்தியர்களில் மோஹித் சர்மாவும் ஒருவர். 2013-ல் சி.எஸ்.கே அணியில் தனது பயணத்தைத் தொடங்கிய மோஹித் சர்மா, தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் அதே அணியில் ப்ரைம் பவுலராகச் செயல்பட்டு மொத்தமாக 57 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2014 சீசனில் ஊதா நிற தொப்பி வென்றார். சி.எஸ்.கே-வில் அறிமுகமான அதே ஆண்டில் இந்திய அணியிலும் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, 2015 ஒருநாள் உலகக் கோப்பையிலும் இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடினார்.

அடுத்து, சென்னைக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்படவே, 2016-ல் பஞ்சாப் அணிக்குச் சென்றார். அங்கு 2018 வரை விளையாடிய மோஹித் சர்மாவை, 2019-ல் ரூ. 5 கோடி கொடுத்து வாங்கியது சென்னை. ஆனாலும், அந்த சீசனில் ஒரே போட்டியில் மட்டுமே சென்னை அவரை ஆட வைத்தது. அதையடுத்து, 2020-ல் ரூ. 50 லட்சத்துக்கு டெல்லி அணியும் அந்த சீசனில் ஒரே போட்டியில் மட்டுமே ஆடவைத்தது. அதன்பிறகு, 2021, 2022 சீசனில் எந்த அணியும் இவரை ஏலத்தில் வாங்கவில்லை. இருப்பினும், 2022-ல் புதிதாக அறிமுகமான குஜராத் அணியில் நெட் பவுலராக இணைந்தார்.
2023-ல் அதே அணியால் ரூ. 50 லட்சத்துக்கு வாங்கப்பட்ட மோஹித் சர்மா, யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சிறப்பாகப் பந்துவீசி, 27 விக்கெட்டுகள் வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு முக்கியப் பங்காற்றினார். மோஹித் தனது ஐ.பி.எல் கரியரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சீசன் இதுதான். இருப்பினும், கடந்த சீசன் (2024) அவருக்கு சிறப்பாக அமையவில்லை. 12 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தினார்.

இதனால், நடப்பு சீசனுக்கான (2025) மெகா ஏலத்தில் குஜராத் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, டெல்லி அணியால் ரூ. 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். இந்த நிலையில், சி.எஸ்.கே-வில் தான் விளையாடிய காலத்தில் தோனி, டென்னிஸ் ஜாம்பவான் மரியா ஷரபோவாவின் பெயரை தனக்கு செல்லப்பெயராக (Nickname) வைத்து அழைத்த நினைவுகளை மோஹித் சர்மா பகிர்ந்திருக்கிறார்.

ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் இதனைப் பகிர்ந்துகொண்ட மோஹித் சர்மா, “மஹி பாய் (தோனி) எனக்கு மரியா ஷரபோவா என்று செல்லப்பெயர் வைத்தார். `சில டென்னிஸ் பிளேயர்ஸைப் போல சத்தம் போடுகிறீர்கள்’ என்று அதற்கு காரணமும் சொன்னார். அதற்கு நான், `அவ்வாறு கத்தும்போது, நாம் மெதுவாகப் பந்துவீசினாலும் 140 – 150 கி.மீ வேகத்தில் பந்துவருவதாக பேட்மேன்ஸ்கள் நினைப்பார்கள். அது எனக்கு பிளஸ் பாய்ன்ட்தான்’ என்பேன்” எனக் கூறினார்.
டென்னிஸ் ஜாம்பவான் மரியா ஷரபோவா, 2006 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.