Mumbai Indians, Sunrisers Hyderabad today IPL match : மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, சன்ரைசர்ஸ் அணி ஓப்பனிங் பேட்டிங் ஆடி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இத்தனைக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கில் பல தவறுகளை செய்தது. தீபக் சாஹர் போட்டியின் முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இருவரும் கொடுத்த அழகான கேட்சுகளை மும்பை பீல்டர்கள் வில் ஜாக்ஸ் மற்றும் கரண் சர்மா இருவரும் கோட்டை விட்டனர். இருப்பினும் இந்த வாய்ப்புகளை சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
ஹைதராபாத் பிட்ச் பேட்டிங்கிற்கு சொர்க்க பூமியாக இருக்கிறது என்பதால் அந்த பிட்சில் ஆடும் மனநிலையிலேயே சன்ரைசர்ஸ் அணியினர் எல்லா பிட்சுகளிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நினைக்கின்றனர். அது அவர்களுக்கு பெரும் பாதகமாக அமைந்து வருகிறது. பிட்சின் நிலையை அறிந்து அதற்கேற்ப பேட்டிங் செய்யாமல் இஷ்டத்துக்கு அதிரடி ஆடுகிறேன் என்ற பெயரில் சீக்கிரம் விக்கெட்டை கொடுப்பதால் அணிக்கான ஸ்கோர் வருவதில்லை. இஷான் கிஷன் தொடர்ச்சியாக சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வருகிறார். மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.
பின்வரிசையில் கிளாசன் ஓரளவுக்கு சிறப்பாக ஆட, கடைசி கட்டத்தில் அன்கித் வெர்மா அதிரடியாக காட்டியதால் 162 ரன்களை எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. மும்பை பிட்ச் பேட்டிங்கிற்கு சாதமாக இருக்கும் என்றாலும் முதல் பேட்டிங்கின்போது பந்துவீச்சாளர்களுக்கே உகந்ததாக இருந்தது. அதேநேரதில் மும்பை இந்தியன்ஸ் பவுலிங்கும் டாப் கிளாசாக இருந்தது. இதனாலேயே சன்ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன்களால் ரன்கள் எடுக்க முடியவில்லை.
அதேபோல் பீல்டிங்கின்போதும் சன்ரைசர்ஸ் பிளேயர்கள் பல தவறுகளை செய்தனர். மும்பை பீல்டர்களைப்போலவே சன்ரைசர்ஸ் அணியின் பீல்டிங்கின்போது டிராவிஸ் ஹெட் ஒரு கேட்சை விட்டார். கிளாசன் ஸ்டம்புக்கு முன்னால் வந்து பந்தை பிடிக்க முற்பட்டதால் அந்த பந்து நோபாலாக அறிவிக்கப்பட்டது. இத்தனைக்கும் அப்போது மும்பை பேட்ஸ்மேன் ரெக்கில்டன் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தபோது கேட்ச் என்ற முறையில் அவுட்டாகி அந்த பந்தில் வெளியேறினார். ஆனால் நடுவர்கள் ரிப்ளேவில் செய்தபோது கிளாசனின் செயல் விதிமுறைக்கு மாறானது எனக்கூறி நோபால் அறிவிக்கப்பட்டு, அவுட்டாகி வெளியே சென்ற ரெக்கல்டன் மீண்டும் மைதானத்துக்கு வரவழைக்கப்பட்டு, நாட் அவுட் கொடுக்கப்பட்டு பேட்டிங் ஆடினார்.
இது சன்ரைசர்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஒட்டுமொத்தமாக பேட்டிங் மற்றும் பீல்டிங், பவுலிங்கில் மும்பை அணியை விட அதிக தவறுகளை சன்ரைசர்ஸ் அணி செய்ததால் தோல்வியை தழுவியது. இதனால் 7 போட்டிகளில் மூன்று வெற்றியை பெற்ற மும்பை புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.