டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்குகள், இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, சோதனையின் போது பெண் அதிகாரிகள் யாரும் இரவில் தங்கவைக்கப்படவில்லை எனவும், ஒரு சில ஆண் அதிகாரிகள் மட்டுமே மூன்று நாளும் தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டதாகவும் தனது வாதத்தை முன்வைத்தார்.

மேலும், சோதனையின்போது டாஸ்மாக் அதிகாரிகளுக்கோ அல்லது அலுவலக உடமைகளுக்கோ எந்த சேதமும் ஏற்படுத்தவில்லை எனவும், இதனை எல்லாம் ஒப்புக்கொண்டு அதிகாரிகள் பஞ்சநாமாவில் கையெழுத்துட்டுள்ளதாகவும் எஸ்.வி.ராஜூ தெரிவித்தார்.
அதோடு, சோதனையின் போது அமலாக்கத்துறை சார்பில் பெண் அதிகாரிகள் இருந்ததாகவும், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட போது அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக பொய்யான தகவல்களை கூறி இந்த விவகாரத்தை திசை திருப்ப முயல்வதாக அமலாக்கத்துறை சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், அமலாக்கத்துறை அதிகாரிகள் எதற்காக வந்திருக்கிறோம் என்ற தகவலை டாஸ்மாக் நிறுவனத் தலைவர் மற்றும் மேலாளரிடம் தெரிவித்த பின்னரே சோதனை தொடங்கப்பட்டதாகவும், அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டு போதிய ஓய்வு தரப்பட்டதாகவும் தெரிவித்த எஸ்.வி.ராஜூ, நள்ளிரவில் பாதுகாப்பு கருதி பெண் ஊழியர்கள் முன் கூட்டியே அனுப்பப்பட்டதாகவும், சோதனையின்போது யாருடைய அந்தரங்க உரிமையும் பாதிக்கப்படவில்லை எனவும் கூறினார். அமலாக்கத்துறை வாதம் நிறைவடைந்த நிலையில் டாஸ்மாக் தரப்பு பதில் வாதத்துக்காக வழக்கு ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.