ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததை கண்டித்ததுடன், அந்த மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்தது. அத்துடன், குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநர் ஆகியோர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவையும் விதித்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மத்திய அரசு இந்ததீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘ ஜெய் ஸ்ரீராம்’ என மாணவர்களை கூறும்படி செய்தது, சர்ச்சையை உருவாக்கியது. இதற்கு ஆளும் திமுக மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச்சென்றார். மூன்று நாள் பயணமாக டெல்லி சென்ற ஆளுநருடன், அவரது செயலர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் சென்றுள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை 20-ம் தேதி அவர் மீண்டும் சென்னை திரும்புகிறார்.
ஆளுநரின் பயணம் வழக்கமானதாக ராஜ்பவன் தரப்பில் கூறப்பட்டாலும், சமீபத்தில் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் சந்திக்கவில்லை. இந்நிலையில், சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பாக சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற ஆளுநர் திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து மத்திய அமைச்சர்களிடம் அவர் ஆலோசனை பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.