தற்போது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியில் சில அதிரடி மாற்றங்களை செய்துள்ளது பிசிசிஐ. கடைசியாக விளையாடிய சில டெஸ்ட் தொடர்களில் மோசமாக விளையாடியதால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல இந்தியா தவறியது. இதன் காரணமாக தற்போது துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயரை பிசிசிஐ நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, அவர் இந்த பதவியில் நியமிக்கப்பட்டு எட்டு மாதங்கள் மட்டுமே ஆகிறது. இதுவரை இரண்டு முறை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா விளையாடியது. ஆனால் இந்த ஆண்டு இறுதி போட்டிக்கு கூட செல்ல தவறியது. காரணம் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரையும் இழந்தது. இதனால் புள்ளி பட்டியலில் சரிவு ஏற்பட்டு பைனலுக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தது.
அணியில் அதிரடி மாற்றங்கள்
இதன் காரணமாக இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐயில் நடந்த காரசார விவாதங்களுக்கு பிறகு சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணியில் உள்ள பயிற்சியாளர்களை மாற்ற திட்டமிட்டுள்ளனர். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு ஜூன் மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் தலைமை பெயர்ச்சியாளர் கௌதம் கம்பீர், பௌலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் மற்றும் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் மட்டுமே இடம் பெற உள்ளனர். துணை அபிஷேக் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் சோஹம் தேசாய் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
அதே போல பிசிசிஐயின் சம்பளப் பட்டியலிலும் பெரிய மாற்றங்கள் வர உள்ளது என்று கூறப்படுகிறது. அதன்படி அதிக சம்பளம் வாங்கியும் சரியாக விளையாடாத வீரர்கள் குறைவான சம்பளத்திற்கு மாற்றப்பட உள்ளனர். இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் டிசம்பர் மாதம் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. டெஸ்ட் தொடர்களில் தோல்வியடைவது சாதாரணமான விஷயம் என்றாலும் இந்திய அணி வீரர்கள் மனதில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமே இல்லாதது போல் இருந்தது. குறிப்பாக சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தொடர் முழுவதும் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் இந்த வெற்றியை தொடர தவறினர். பார்டர் கவாஸ்கர் தொடர் முழுக்க சிறப்பாக விளையாடாத ரோகித் சர்மா கடைசி டெஸ்ட் போட்டியில் தானே அணியிலிருந்து விலகிக் கொண்டார். அதற்கு முன்பு இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அதே போல இந்த சமயத்தில் இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் நடக்கும் விஷயங்கள் அதிகமாக இணையத்தில் வெளியானது. இதன் காரணமாகவும் தற்போது இந்த துணைப் பயிற்சியாளர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.