புதுடெல்லி: இந்திய விண்வெளி வீரரை ஏற்றிச் செல்லும் சர்வதேச விண்வெளிப் பயணம் அடுத்த மாதம் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) எதிர்காலத் திட்டங்களை மறு ஆய்வு செய்வதற்காக டெல்லியில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளித் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் கூறும்போது, “இந்தியா தனது விண்வெளி பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தயாராக உள்ளது. இந்திய விண்வெளி வீரரைச் சுமந்து செல்லும் சர்வதேச விண்வெளி பயணம் அடுத்த மாதம் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) பயணம் மேற்கொள்ள இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா தயாராக இருக்கிறார். 1984-ஆம் ஆண்டு சோவியத் சோயுஸ் விண்கலத்தில் இந்தியாவின் ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்றார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரராக சுபான்ஷு சுக்லா பெயர் பெறுவார். இந்தியா தனது அடுத்த விண்வெளி மைல்கல்லை எட்டத் தயாராக உள்ளது” என தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது, விண்வெளித் துறை செயலாளரும், இஸ்ரோ தலைவருமான டாக்டர் வி. நாராயணன், செயல்படுத்தவிருக்கும் பல்வேறு விண்வெளித் திட்டங்களின் நிலை குறித்து விளக்கிக் கூறினார்.