நியூயார்க்,
இந்தியாவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு விட்டு வெளிநாடுகளுக்கு பலர் தப்பித்து செல்கின்றனர். இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இவர்களை கைது செய்து இந்தியா கொண்டு வருவதில் பல சவால்கள் உள்ளன. இருப்பினும் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவில் குற்றம் புரிபவர்களை அதிரடியாக கைது செய்து வருகிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டு சண்டிகரில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட குண்டு வீச்சில் தொடர்புடைய ஹேப்பி பாசியா என்று அழைக்கப்படும் ஹர்ப்ரீத் சிங்கிற்கு எதிராக, கடந்த ஜனவரி மாதம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை என்.ஐ.ஏ., பிறப்பித்தது. மேலும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான, பப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் தொடர்புள்ள ஹேப்பி பாசியா குறித்து தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் சன்மானத்தை என்.ஐ.ஏ., அறிவித்திருந்தது.
இந்த நிலையில், என்.ஐ.ஏ.,வால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்காவில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரை விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள அஜ்னாலா தெஹ்சிலைச் சேர்ந்தவர் ஹேப்பி பாசியா . சண்டிகரின் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதல் தொடர்பாக அக்டோபர் 1, 2024 அன்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிங் தலைமறைவாக இருந்து வந்தார். இரண்டு சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய ஹேப்பி பாசியா, அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக நுழைந்து பிடிபடுவதைத் தவிர்க்க பர்னர் போன்களைப் பயன்படுத்தியதாக எப்.பி.ஐ தெரிவித்துள்ளது. பஞ்சாப்பில் ஹர்பிரீத் சிங் என்ற ஹேப்பி பசியாவுக்கு எதிராக மொத்தம் 14 வழக்குகள் உள்ளன.