எலான் மஸ்க் – பிரதமர் மோடி பேச்சு: தொழிநுட்பம், புத்தாக்க துறைகள் குறித்து ஆலோசனை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்குடன் இன்று தொலைபேசியில் உரையாடினார். தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் உள்ள ஆர்வத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

இந்திய மின்சார வாகனச் சந்தையில் நுழைவதற்கான வாய்ப்புகளை டெஸ்லா நிறுவனம் ஆராய்ந்து வரும் இந்த நேரத்தில் இந்த உரையாடல் நடந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டனில் இருவருக்கும் இடையில் நடந்த முந்தைய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், பல்வேறு தலைப்புகளின் கீழ் இருவரும் உரையாடியுள்ளனர்.

இருவருக்கும் இடையிலான உரையாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “எலான் மஸ்குடன் பேசினேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன்னில் நாங்கள் சந்தித்தபோது பேசிய தலைப்புகள் உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி இப்போது பேசினோம்.

தொழில்நுட்பம் மற்றும் புதுமைத்துறைகளில் ஒத்துழைப்புகளுக்கான மகத்தான ஆற்றல்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தத் துறைகளில் அமெரிக்காவுடனான நமது கூட்டணியை மேம்படுத்துவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு பிப்ரவரியில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது, அங்கு அவர் எலான் மஸ்கைச் சந்தித்தார். மஸ்க் அந்தச் சந்திப்பில் தனது மூன்று மகன்களுடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் மாதங்களில் மும்பைக்கு அருகில் உள்ள ஒரு துறைமுகத்துக்கு சில ஆயிரம் கார்களை அனுப்பி வைப்பதன் மூலம், இந்தியச் சந்தைக்குள் நுழைய டெல்ஸா நிறுவனம் தயாராக இருக்கும் நிலையில் பிரதமர் மோடி, எலான் மஸ்க் டெலிபோன் உரையாடல் நடந்துள்ளது.

இதுகுறித்த தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், “இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மின்சார கார் உற்பத்தி ஜாம்பவான் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவில் தனது கார் விற்பனையைத் தொடங்க திட்டமிட்டுள்ளார். இந்திய சந்தைகளில் டெஸ்லாவின் வருகை எதிர்பார்க்கப்படும் இந்தநிலையில், பிரதமர் மோடி – எலான் மஸ்க் இடையேயான உரையாடல், இறக்குமதி வரி குறித்து இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்து வரும் பேச்சுவார்த்தையுடன் இணைந்து நடந்துள்ளது.” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.