ஐதராபாத்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 33-வது லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 7 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 2 வெற்றி (ராஜஸ்தான், பஞ்சாப் அணிக்கு எதிராக), 5 தோல்விகளை (லக்னோ, டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளிடம்) சந்தித்துள்ளது.
நடப்பு சீசனை வெற்றியோடு தொடங்கிய ஐதராபாத் அணி அதன் பிறகு வரிசையாக 4 ஆட்டங்களில் தோற்றது. அதன்பின் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன் காரணமாக வெறும் 4 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில் ஐதராபாத் அணி புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. ஐதரபாத் அணிக்கு இன்னும் 7 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளது.
பிளே ஆப் சுற்றை உறுதி செய்ய குறைந்தபட்சம் 8 வெற்றிகள் பெற வேண்டும். இதனால் அந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியுமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற உள்ள வாய்ப்புகள் குறித்து காணலாம்..!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மீதமுள்ள 7 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். மாறாக 5 வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் பெற்ற நிலையில் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.
ஒருவேளை இரண்டிற்கும் மேற்பட்ட தோல்விகளை சந்தித்தால் லீக் சுற்றுடன் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் ஐதராபாத் அணிக்கு எதிர்வரும் போட்டிகள் வாழ்வா- சாவா? போன்றதாகும்.