ஒரு வார ஆயுர்வேத சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் ஓ.பன்னீர்செல்வம்!

கோவை: கோவையில் தங்கி ஒரு வார காலம் ஆயுர்வேத சிகிச்சை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஏப்.18) மதியம் வீடு திரும்பினார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கோவை கணபதி பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு அடிக்கடி வந்து சிகிச்சை பெற்று செல்கிறார். இந்த மையத்தில் நீராவி குளியல், யோகா,நேச்சுரோபதி, அக்குபஞ்சர், பிசியோதெரபி, சிறப்பு தெரபி சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி இரவு கோவை வந்த ஓ.பன்னீர்செல்வம், கோவை கணபதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு சென்று தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சிகிச்சை மையத்தில் 2 நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சுமார் ஒரு வாரம் சிகிச்சை பெற்றார். இதனிடையே, ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஏப்.18) மதியம் தேனி புறப்பட்டு சென்றார்.

அமித் ஷா சந்திப்பை தவிர்த்த ஓ.பன்னீர்செல்வம்: சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வில் பாஜக – அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அச்சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது” என்றார்.

டெல்லியில் இருந்து தமிழகம் வரும் பாஜக தலைவர்களை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதை தவிர்த்துவிட்டு கோவை வந்து ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.