கேப்டவுன்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி மற்றும் 2 வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறி வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற எதிர்வரும் போட்டிகளில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற சூழலில் விளையாட உள்ளது.
சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் விலகிய நிலையில் கேப்டன் பொறுப்பை மகேந்திரசிங் தோனி மீண்டும் ஏற்றுள்ளார். தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்கு பிறகு தோனி தலைமையில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.
இதனிடையே தென் ஆப்பிரிக்க வீரரான டெவால்ட் பிரெவிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு சென்னை ரசிகர்களிடையே அவர் சிஎஸ்கே அணியில் இணைய உள்ளாரா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில், எந்த வித தலைப்பும் இல்லாமல் வெறும் மஞ்சள் நிற போட்டோவை மட்டும் பதிவிட்டுள்ளார்.
இதன் காரணமாக அவர் சென்னை அணியில் இணைய உள்ளாரா? என்று சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
‘பேபி ஏபிடி’ என்றழைக்கப்படும் அதிரடி வீரரான டெவால்ட் பிரெவிஸ் கடந்த சீசனில் மும்பை அணியில் இடம்பெற்றிருந்தார். பெரிய அளவில் வாய்ப்புகளை பெறாத அவரை இந்த சீசனுக்கான மெகா ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.