“சீனாவுடனான வரிகள் முடிவுக்கு வரக்கூடும்” – ட்ரம்ப் சமிக்ஞை

வாஷிங்டன்: சீனா மீதான வரிவிதிப்பு நடவடிக்கை முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் விவரித்துள்ளார்.

கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிப்பதாகவும், இனி தங்கள் நாடும் பரஸ்பர வரியை விதிக்கும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக கடந்த 2-ம் தேதி இந்தியா, சீனா, இங்கிலாந்து, கனடான, மெக்சிகோ உட்பட உலகின் பல நாடுகளின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தினார். இந்தியாவுக்கு 27% வரியை உயர்த்திய அமெரிக்கா, சீனாவுக்கு 34% வரியை உயர்த்தியது.

அமெரிக்காவின் இந்த வரி உயர்வுக்கு உலகின் பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் உயர்த்தியது. அமெரிக்காவின் அதிரடி வரி விதிப்பு சர்வதேச பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து, சீனா தவிர்த்த அனைத்து நாடுகளுக்குமான வரி உயர்வை 10% ஆக குறைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார்.

அதோடு, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் உயர்த்தினார். இதையடுத்து, சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை உயர்த்தியது. அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடம் இருந்து ஜெட் விமானங்களை வாங்க தடை, விமான உதிரி பாகங்கள் வாங்க தடை, அரிய கனிமங்கள் ஏற்றுமதிக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளையும் தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு சீனா விதித்தது.

சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா 145% ஆக உயர்த்தியது. அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை சீனா 125% வரை உயர்த்தியது. இந்த எண்கள் விளையாட்டால் யாருக்கும் பலன் இருக்காது என தெரிவித்த சீனா, இனி அமெரிக்காவின் இத்தகைய எண்கள் விளையாட்டுக்கு பதில் அளிக்கப் போவதில்லை என அறிவித்தது. அதாவது, அமெரிக்கா இனி எவ்வளவு வரி உயர்வை அறிவித்தாலும், பதிலுக்கு வரியை உயர்த்தப் போவதில்லை என சீனா கூறியது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சமாளிக்க, ஐரோப்பிய நாடுகளுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சீனா பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும், அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதற்கான தனது திட்டத்தையும் சீனா அறிவித்தது.

இந்நிலையில், அமெரிக்காவும் சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை இனி உயர்த்தாது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஒரு குறிப்பிட்ட கட்டத்தை வரி உயர்வு எட்டிவிட்டது. எனவே, மக்கள் சீன பொருட்களை வாங்க மாட்டார்கள். அதனால், இனியும் வரியை அதிகமாக்க நான் விரும்பவில்லை.

வரி உயர்வை அதிகரிக்க நான் விரும்பாமல் இருக்கலாம் அல்லது அந்த நிலைக்குச் செல்ல விரும்பாமல் இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், மக்கள் வாங்கப் போவதில்லை என்பதால் நான் வரியை குறைக்கும் முடிவை நோக்கி செல்ல விரும்பலாம்” என தெரிவித்துள்ளார்.

வரிகள் விதிக்கப்பட்டதிலிருந்து சீனா தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். அதேநேரத்தில், பேச்சுவார்த்தைகளின் தன்மையைக் குறிப்பிடவோ அல்லது சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொடர்பில் இருக்கிறாரா என்பதைக் குறிப்பிட ட்ரம்ப் மறுத்துவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.