`தப்பியதா… தள்ளிப்போனதா?’ ஊசலாட்டத்தில் பொன்முடியின் இலாகா!

வைணவ, சைவ சமயங்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்தச் சூழலில், அவரின் இலாகாவை மாற்றுவதற்கு ஆட்சி மேலிடம் ஆலோசித்ததாகவும், சிலர் குறுக்கே புகுந்து தடுத்ததால் தற்போதைக்கு முடிவு தள்ளிவைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். நேற்று(ஏப்ரல் 17-ம் தேதி) நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும், பொன்முடி தொடர்பாக சில கருத்துக்களை எச்சரிக்கையுடன் சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

பொன்முடி

பொன்முடி மீது ஆக்‌ஷன்

பொன்முடி விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். “ஏப்ரல் 6-ம் தேதி, திராவிட இயக்கப் பேச்சாளர் திருவாரூர் தங்கராசுவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அங்கேதான், நா கூசும் அளவுக்கு மத உணர்வுகளை அவமதிக்கும் வகையில் சில கருத்துக்களைப் பேசியுள்ளார்.

அப்படி அவர் பேசிய தகவல், உடனடியாக கட்சி மேலிடத்தின் கவனைத்திற்கு வரவில்லை. நான்கு நாள்கள் கழித்து சோசியல் மீடியாவில் வைரலான பின்னர்தான், மேலிடத்தின் கவனித்திற்கு உளவுத்துறையால் கொண்டுச் செல்லப்பட்டது. துணைப் பொதுச் செயலாளரான கனிமொழியும், பொன்முடி மீது ஆக்‌ஷன் எடுக்கச் சொல்லி கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தார். அதனைத் தொடர்ந்தே, பொன்முடியிடமிருந்த துணைப் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்து திருச்சி சிவாவிடம் கொடுத்தது கட்சி மேலிடம்.

ஏப்ரல் 11-ம் தேதி தன்னுடைய கட்சிப் பதவி பறிப்பு அறிக்கை வெளியான சமயத்தில், சொந்த ஊரில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பொன்முடி சென்றிருந்தார். உடனடியாக அந்த நிகழ்ச்சிகளை ரத்துச் செய்துவிட்டு சென்னை திரும்பியவர், முதல்வர் ஸ்டாலினைப் பார்ப்பதற்காக செனடாப் சாலைக்குச் சென்றார். ஆனால், கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் வீட்டில் காத்திருந்தும், பொன்முடியை முதல்வர் பார்க்கவில்லை. அந்தச் சூழலில்தான், பொன்முடியின் இலாகாவை மாற்றி டம்மியாக்க முதல்வர் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் பரவின.

உடனடியாக, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, சீனியர் அமைச்சர்கள் சிலர் முதல்வரிடம் பேசியிருக்கிறார்கள். பொன்முடிக்கு ஆதரவாக சில கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள்.

கி.வீரமணி

‘தலைவர் இருந்திருந்தால் இப்படி அவசரப்பட்டிருக்க மாட்டார். திராவிடர் கழக மேடையில் அல்லவா பொன்முடி பேசியிருக்கிறார்…’ என வீரமணி சொல்லவும், ‘நீங்கள் பேசுவதற்கும் அமைச்சரான பொன்முடி பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தேர்தல் அரசியலில் நீங்கள் இல்லை. ஆனால், நாங்கள் வாக்குக் கேட்டுச் சென்றாக வேண்டும். தவிர, பொன்முடியின் பேச்சில் எனக்கு துளியும் உடன்பாடில்லை…’ என படபடத்திருக்கிறார் முதல்வர். ‘பொன்முடி விஷயத்தில் அவசரப்படாதீர்கள்…’ எனச் சொல்லிவிட்டு போனை வைத்திருக்கிறார் வீரமணி.

அவரைத் தொடர்ந்து பேசிய சீனியர் அமைச்சர்களும், ‘கூட்டத்தொடர் நடக்கும் நேரத்தில் பொன்முடியின் இலாகாவை மாற்றுவது சரியாக இருக்காது. எதுவாக இருந்தாலும் கூட்டத்தொடர் முடிந்தபிறகு முடிவெடுக்கலாம்..’ என ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகே கட்சித் தலைமை இறங்கிவந்தது. அப்போதும்கூட, பொன்முடியை அழைத்துப் பேச தலைமை விரும்பவில்லை.

ஏப்ரல் 17-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர் நேருவுக்கு அருகே அமர்ந்திருந்தார் பொன்முடி. கூட்டம் நடந்த 20 நிமிடமும் அவர் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை முதல்வர். கூட்டம் முடிந்து அதிகாரிகளை வெளியே அனுப்பிய முதல்வர், சுமார் ஐந்து நிமிடங்களுக்கு அமைச்சர்களிடம் கடுமையாகவே பேசினார். ‘உங்களால இந்த ஆட்சிக்கும் கட்சிக்கும் ஒரு அவப்பெயர் வருதுன்னா, அவங்க யாராக இருந்தாலும் தூக்கியெறிய தயங்க மாட்டேன். தங்க ஊசிங்கறதுனால, கண்ணுல குத்திக்க முடியாது… இனியும் ஆட்சிக்கு அவப்பெயர் கொண்டுவர நினைக்காதீங்க. பொது இடங்கள்ல பேசும்போது கவனத்தோடு பேசுங்க..’ எனச் சொல்லிவிட்டு அமைச்சர் பொன்முடியைப் பார்த்தார். பொன்முடிக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. உதட்டை சுழித்துக்கொண்டு தலையசைத்து ஆமோதித்தார் பொன்முடி.

இப்போதைக்கு, கி.வீரமணி, சீனியர் அமைச்சர்களின் தலையீட்டால் பொன்முடியின் இலாகா மாற்றம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 29-ம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடையவுள்ளது. அதன்பிறகு, பொன்முடியிடம் இருக்கும் வனத்துறை பறிக்கப்படலாம். கதர் துறை அமைச்சராக மட்டுமே அவர் தொடர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே, பொன்முடியின் கட்சிப் பதவியை முதல்வர் பறித்ததில், சீனியர்கள் பலருமே அரண்டுதான் போயிருக்கிறார்கள். அவர் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலமாக, தன் கட்டுக்குள் வராத சீனியர்கள் பலரையும் கட்டுப்பாட்டில் எடுக்க தீர்மானித்திருக்கிறார் முதல்வர்” என்றனர் விரிவாக.

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்ததால்தான், தற்போது அமைச்சராகச் சுற்றுகிறார் பொன்முடி. ‘நிலைமை இப்படியிருக்கையில், எவ்வளவு கவனமாக அவர் பேச வேண்டும்… தேர்தல் நெருக்கும் சூழலில், தேவையற்ற சச்சரவுகளை நாமே ஏன் உருவாக்கிக் கொள்ள வேண்டும்…’ என்பதுதான் முதல்வர் அலுவலகத்தின் வாதமாக இருக்கிறது. தள்ளிப்போடப்பட்ட இலாகா மாற்றத்தை, மொத்தமாகவே நிறுத்திவைபப்தற்கு கடுமையாகவே மெனக்கெடுகிறார் பொன்முடி. எனினும் கட்சித் தலைமை பிடிகொடுப்பதாகவே தெரியவில்லை.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.