மதுரை: “திமுக அமைச்சர்களால் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது,” என்று அதிமுக ஆர்ப்பாட்டத்தில் வி.வி.ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக அமைச்சர் பொன்முடி, பெண்களை இழிவுபடுத்தியும், ஆபாசமாக பேசியதையும் கண்டித்து, அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஒத்தக்கடையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளரும், அமைப்பு செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமை வகித்து பேசினார். அப்போது, வி.வி.ராஜன் செல்லப்பா பேசியது: “அமைச்சர் பொன்முடி தொடர்ந்து பெண்களை கேலியாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
முதலில் ஓசி பஸ் என்றார். பின் பெண்களை சாதியை சொல்லி இழிவுப்படுத்தினார். அவரை, அவரது கட்சித் தலைமை கண்டிக்காததால் அமைச்சர் பொறுப்பில் இருந்துகொண்டு அவர் இப்படி பொறுப்பில்லாமல் பேசி வருகிறார். அவரைப் போலவே மற்ற அமைச்சர்களும், தங்கள் பேச்சுகளில் கண்ணியத்தை கடைபிடிக்காமல் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். அவர்களை கண்டிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அச்சப்படுகிறார்.
திமுக அமைச்சர்களால் தொடர்ந்து தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவு தற்போது நீதிமன்றமே முன்வந்து அமைச்சர் பொன்முடி மீது வழக்கை பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டில் கடுமையான மின்வெட்டால் திமுக ஆட்சியை பறிக்கொடுத்தது. ஆனால், 2026 தேர்தலில் திமுக அமைச்சர்களின் மோசமான ஆபாச பேச்சுகளால் திமுக ஆட்சியை இழக்கப்போகும் வரலாறு நிச்சயம் உருவாகும்,” என்று அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.என் ராஜேந்திரன், அம்பலம், சசிகலா, சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் நிலையூர் முருகன், பொன்.ராஜேந்திரன், வெற்றிச்செழியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.