லக்னோ: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்-க்கு எதிராக பத்வா (சமய கட்டளை) பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அனைத்து இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷாபுதீன் ரஸ்வி பரேல்வி பிறப்பித்த பத்வாவில் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த ஒரு திரைப்படத்தில் முஸ்லிம்கள், தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு உள்ளனர். தற்போது விஜய் அரசியலில் கால் பதித்துள்ளார். எனவே அவர் முஸ்லிம்களுடன் இணக்கத்தை விரும்புகிறார்.
விஜய் நடத்திய இப்தார் விருந்தில் சூதாட்டத்தில் ஈடுபடுவோர், மது அருந்துவோர் பங்கேற்று உள்ளனர். இத்தகைய நபர்களை இப்தார் விருந்துக்கு அழைப்பது பாவம். தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் இவர்களை நம்ப வேண்டாம். இவர்களை அழைப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பீஸ்ட் திரைப்படம்: கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரலில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது. நெல்சன் இயக்கிய இந்த திரைப்படத்தில் முஸ்லிம்கள், தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டதாக அனைத்து இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் ஷாபுதீன் ரஸ்வி பரேல்வி தற்போது குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த மார்ச் 7-ம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது முஸ்லிம்களை அவமதித்தாக தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில் விஜய் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த அமைப்பை சேர்ந்த சையத் கவுஸ் கூறும்போது, “விஜய் நடத்திய இப்தார் விருந்தில் பங்கேற்றவர்களில் பலர் குடிகாரர்கள், ரவுடிகள். புனித நிகழ்வுக்கு வந்த மக்களை, பவுன்சர்கள் மதிக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார். தற்போது இதே குற்றச்சாட்டை மவுலானா ஷாபுதீன் ரஸ்வி பரேல்வி கூறியுள்ளார்.