“நாடாளுமன்ற மசோதாவை குடியரசுத் தலைவர் காலவரையின்றி தாமதப்படுத்த முடியுமா?” – தன்கருக்கு கபில் சிபல் கேள்வி

புதுடெல்லி: “நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாவை குடியரசுத் தலைவர் காலவரையின்றி தாமதப்படுத்த முடியுமா?” என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கபில் சிபல் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவருமான கபில் சிபல், “இன்று காலை நான் குடியரசு துணைத் தலைவரின் கருத்துகளைப் படித்தபோது ​மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். அரசு நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் நீதித் துறை முடிவுகளுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது உண்மையிலேயே கவலைக்குரியது. தீர்ப்பு அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்போது அதை அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் ஞானம் என்று போற்றுகிறார்கள். ஆனால் ஒரு தீர்ப்பு அவர்களின் கருத்துகளுடன் ஒத்துப்போகாத தருணத்தில், அவர்கள் குற்றச்சாட்டுகளைச் சுமத்தத் தொடங்குகிறார்கள்.

பிரிவு 142-ஐ ‘அணு ஏவுகணை’ என்று அழைப்பது மிகவும் சிக்கலானது என்று குடியரசு துணைத் தலைவருக்கு உரிய மரியாதையுடன் தெரிவிக்க விரும்புகிறேன். நமது நீதித் துறை நிறுவனங்களைத் தாக்கவோ அல்லது குறைந்து மதிப்பிடவோ கூடாது. நீதித் துறை நீதியையும் அரசியலமைப்பையும் நிலைநிறுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். நீதித் துறையின் சுதந்திரம் ஜனநாயகத்துக்கும் அடிப்படையானது. அது இல்லாவிட்டால் அனைத்து உரிமைகளும் ஆபத்துக்கு உள்ளாகும்.

ஆளுநர்களும் குடியரசுத் தலைவரும் அமைச்சர்கள் குழுவின் ‘உதவி மற்றும் ஆலோசனை’யின் பேரில் செயல்படுகிறார்கள் என்பதை குடியரசு துணைத் தலைவர் அறிந்திருக்க வேண்டும். ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்தது உண்மையில் சட்டமன்றத்தின் மேலாதிக்கத்தின் மீதான தலையீடு. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை எந்தச் சூழலில் பிறப்பித்தது என்பதை குடியரசு துணைத் தலைவர் தெரிந்திருக்க வேண்டும். தனது ஒப்புதலுக்காக வந்த மசோதாக்களுக்கு ஆளுநர் 2 ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்காமல் இருக்க முடியுமா?

நாடாளுமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றினால், குடியரசுத் தலைவர் அதை காலவரையின்றி தாமதப்படுத்த முடியுமா? அது கையெழுத்திடப்படாவிட்டாலும், அதைப் பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார் கபில் சிபல்.

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பேசியது என்ன? – டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், “டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, ஒரு அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை தீயணைப்பு வீரர்களும் போலீஸாரும் பார்த்துள்ளனர். ஆனால் இது தொடர்பான தகவல் ஒரு வாரத்துக்குப் பிறகுதான் ஊடகங்களில் வெளியானது.

இதைப் பார்த்து நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாமதமாக இந்த தகவலை வெளியிட்டது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். நாட்டு மக்களால் மதிக்கப்படும் நீதித் துறை குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவரை வழிநடத்தும் சூழ்நிலை ஜனநாயகத்தில் இருக்க முடியாது. நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவருக்கு எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது” என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.