நேபிடா: பர்மிய புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ள அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேருக்கு மியான்மர் ராணுவ அரசின் தலைவர் மின் ஆங் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூ கி சிறையில் அடைக்கப்பட்டார். மியான்மர் தற்போது உள்நாட்டு போரை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இங்கு கடந்த மாதம் 28-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 3,725 பேர் உயிரிழந்தனர். பாரம்பரிய கட்டிடங்கள் எல்லாம் இடிந்தன. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் விரைவில் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என ராணுவத் தலைவர் உறுதியளித்துள்ளர்.
இந்நிலையில் மியான்மரில் பர்மிய புத்தாண்டு திங்யான் கடந்த 13-ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. மியான்மரில் புத்தாண்டு விடுமுறையில் சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுவது வழக்கம். இதை முன்னிட்டு, அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கி சிறையில் இருந்து விடுவிக்க ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் உத்தரவிட்டார். வெளிநாட்டு கைதிகள் 13 பேரும் விடுவிக்கப்பட்டு, அவர்களது நாட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் சட்டத்தை மீறினால், அவர்கள் புது தண்டனையுடன், பழைய வழக்கில் மீதுமுள்ள தண்டனையை சேர்த்து அனுபவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கொடிய குற்றங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தவிர மற்றவர்களுக்கு தண்டனை குறைக்கப்பட்டது. யாங்கூன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை சிறை வாசலில் குடும்பத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
சிறையில் ஆங் சான் சூகி: ஆங் சான் சூ கி உட்பட அரசியல் கைதிகள் 22,197 பேர் இன்னும் மியான்மர் சிறைகளில் உள்ளனர். மியான்மரில் புத்தாண்டு விடுமுறையிலும், ராணுவத்துக்கும், ஜனநாயக ஆதரவு படையினருக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை தெரியவில்லை.