மும்பை,
ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை 18.1 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 36 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வில் ஜேக்ஸ்க்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து வில் ஜேக்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்தே எனக்கும் சரி, எங்களது அணிக்கும் சரி சற்று சுமாராகத்தான் இருந்தது. அதனால் அனைவருமே வருத்தத்தில் இருந்தோம். ஆனால், தற்போது படிப்படியாக எங்களது அணி வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதில் எனது பங்கும் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
இந்த போட்டியின் முதல் பந்திலேயே நான் கேட்சை விட்டதும் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், அதன்பிறகு பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி வெற்றிக்கு கை கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி. அதேபோன்று ஒரு புதிய வீரராக ஒரு பெரிய சாம்பியன் அணிக்குள் முதலில் இணையும்போது சற்று கடினமாகவே இருந்தது. ஆனால், இப்பொழுது மும்பை அணி எனக்கு பழக்கமாகிவிட்டது.
ஒவ்வொரு வீரருக்குமே இதுபோன்று சகஜ நிலைக்கு திரும்ப சில நேரம் தேவைப்படும். அந்த வகையில் தற்போது நான் அணியுடன் நல்ல பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக உணர்கிறேன். இந்த அணியில் ஏகப்பட்ட ஸ்டார் வீரர்கள் இருப்பதனால் எனக்கு நல்ல நம்பிக்கையும் தைரியமும் இருக்கிறது. அதை வைத்து இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினேன்.
அதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணி என்னை மூன்றாவது இடத்தில் களமிறக்கினாலும் சரி, ஏழாவது இடத்தில் களமிறக்கினாலும் சரி அணிக்கு என்ன தேவையோ அதை புரிந்து கொண்டு அந்த பொறுப்புடன் இனிவரும் போட்டிகளிலும் எனது சிறப்பான ஆட்டத்தை தொடர்வேன். இவ்வாறு அவர் கூறினார்.