கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடந்த வன்முறையை மாநில அரசு கட்டுப்படுத்த தவறியதால், மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது. இதை வலியுறுத்தும் விதமாக நாளை (சனிக்கிழமை) நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய விஎச்பி தலைவர் அலோக் குமார், “மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் நடந்த இந்துக்களுக்கு எதிரான கொடூரமான கொலை, கலவரம், தீ வைப்பு, வன்முறை, கொள்ளை மற்றும் பெரிய அளவிலான இடப்பெயர்வு சம்பவங்கள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி இருக்கின்றன. வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், மேற்கு வங்கத்தில் மட்டும் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மிகப் பெரிய அளவில் நடக்கின்றன.
முர்ஷிதாபாத்தில் நடந்த முழு சம்பவத்தையும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க வேண்டும். மால்டாவில் உள்ள நிவாரண முகாம்களில் வசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்து சமூகத்துக்கு உதவ முன்வரும் அமைப்புகளை தடுக்கும் மாநில அரசின் செயல் மனிதாபிமானமற்றது.
இந்துக்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்கள் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அமைதியாக இருப்பது ஆழ்ந்த கவலையை அளிக்கிறது. இந்தத் தாக்குதல்கள் வெளிநாட்டு வங்கதேசத்தவர்களின் ஈடுபாட்டுடன் திட்டமிடப்பட்டவை என்றும், இந்தப் பிரச்சினை சர்வதேசமானது என்றும் மம்தா பானர்ஜி கூறுகிறார். அப்படியானால், இந்தச் சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் ஏன் கோரவில்லை?
பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்; தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். சொத்துக்கள் சூறையாடப்பட்ட, எரிக்கப்பட்ட அல்லது நாசப்படுத்தப்பட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மேலும், மாநிலத்தில் உள்ள இந்துக்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
பல்வேறு பிரச்சினைகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடப்பது பொதுவானது. ஆனால், போராட்டங்களின் பெயரில் இந்துக்கள் மீதான தாக்குதல்களும் கொடூரமான கொலைகளும் சமீப ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஒரு போக்காக மாறிவிட்டது. அரசாங்கத்தின் அலட்சியமும், தீவிரவாத, சமூக விரோத சக்திகளுக்கான ஆளும் கட்சியின் நேரடி அல்லது மறைமுக ஆதரவும் இல்லாமல் இது நடக்காது. எனவே போராட்டக்காரர்கள், பிரச்சினை எதுவாக இருந்தாலும் இந்துக்களை குறிவைப்பது ஏன் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மாநில அரசு தனது குறைகளை மறைக்க பாதிக்கப்பட்ட பல குடும்பங்களை, முர்ஷிதாபாத்துக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்புகிறது. மத்திய பாதுகாப்புப் படையினரால் வலுவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்காவிட்டால், தங்கள் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருக்கும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள். தற்போதைய சூழலில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து அங்கு செல்ல மாட்டோம் என பலரும் கூறுகிறார்கள். ஆனால், மாநில அரசு அவர்களை வலுக்கட்டாயமாக அங்கே மீண்டும் செல்ல வற்புறுத்துவது அவர்களை உயிருடன் கொல்வது போன்றதல்லவா? மாநில அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறையைக் கண்டித்து, நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விஎச்பி நாளை(சனிக்கிழமை) போராட்டங்களை நடத்தும். இந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.