ரஷ்யா – உக்ரைன் அமைதி ஒப்பந்த முயற்சிகளை கைவிட அமெரிக்கா திட்டம்?

பாரிஸ்: ரஷ்யா – உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெளிவாக தெரியாவிட்டால் அடுத்த சில நாட்களில், இதற்கான மத்தியஸ்த முயற்சியில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விலகிவிடுவார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐரோப்பிய, உக்ரேனிய தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய மார்கோ ரூபியோ, “இந்த முயற்சியை வாரக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ தொடர நாங்கள் விரும்பவில்லை. நாம் இப்போது மிக விரைவாக தீர்மானிக்க வேண்டும். அடுத்த சில வாரங்களுக்குள் இது சாத்தியமாகுமா இல்லையா என்பது குறித்து சில நாட்களில் நான் பேசுகிறேன்.

அதிபர் ட்ரம்ப், இவ்விஷயத்தில் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளார். ஏனெனில், இதற்காக அவர் நிறைய நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணித்துள்ளார். இது முக்கியமானது. என்றாலும், இதே அளவுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் உள்ளன.

அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதி செய்வது நம் முன் உள்ள ஒரு பிரச்சினை. அதேநேரத்தில், இது சாத்தியமாகுமா என்பதை நாம் குறுகிய காலத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த சவாலும் நம் முன் உள்ளது. ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டுவது கடினம் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், அது விரைவில் செய்யப்படுவதற்கான அறிகுறிகள் இருக்க வேண்டும்.

இதை 12 மணி நேரத்தில் செய்து முடிக்க முடியும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், அது எவ்வளவு தூரம் வித்தியாசமாக இருக்கிறது என்பதையும், அந்த வேறுபாடுகளைக் குறைக்க முடியுமா என்பதையும் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.” என தெரிவித்தார்.

உக்ரைனின் கனிமங்களை அமெரிக்கா அணுக அனுமதிக்கும் ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறேன் என்று ட்ரம்ப் நேற்று(வியாழக்கிழமை) கூறி இருந்தார். உக்ரைனுடனான அமெரிக்கப் பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் வெளிப்பட்ட நிலையில், ரூபியோ இவ்வாறு கூறி இருக்கிறார். வளர்ந்து வரும் புவிசார் அரசியல் சவால்களைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் இல்லாததால் வெள்ளை மாளிகையில் அதிகரித்து வரும் விரக்தியை ரூபியோவின் கருத்துக்கள் வெளிக்காட்டுகின்றன.

வெள்ளை மாளிகையில் தனது முதல் 24 மணி நேரத்திற்குள் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.