சென்னை: மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளில் ரூ.216 கோடியில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் பூஜ்ஜிய நேரத்தில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மாங்காடு மற்றும் குன்றத்தூர் நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை சேர்க்கக் கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு அமைச்சர் கே.என்.நேரு அளித்த பதில்:
குன்றத்தூர் நகராட்சி மற்றும் அருகில் உள்ள 11 ஊராட்சி பகுதிகளை ஒருங்கிணைத்து நகராட்சியாக உருவாக்க ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, பாதாள சாக்கடை திட்டப்பணியை மேற்கொள்ள கழிவுநீரேற்று நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திட்டத்தை செயல்படுத்த திட்ட பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிகள் ஏதும் இருந்தால், அதை சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட மாங்காடு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அருகில் உள்ள பூந்தமல்லி மற்றும் திருவேற்காடு நகராட்சிகளுடன் ஒருங்கிணைந்த வகையில் செயல்படுத்த ரூ.216 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 84 கிமீ நீளத்துக்கு கழிவுநீர் பாதை, 6 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள், 3,667 இயந்திர நுழைவு வாயில் குழிகள், 20,258 கழிவுநீர் குழாய் இணைப்புகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.