20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சச்சின்’ திரைப்படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. 2005 ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில், விஜய், ஜெனிலியா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சச்சின்’. கலைப்புலி தாணு தயாரித்த இப்படத்திற்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
இன்று (ஏப்ரல் 18) இப்படம் மீண்டும் திரையரங்களில் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு வெளியாகியிருக்கிறது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இப்படத்தின் சிறப்புக் காட்சியை இன்று காலையே திரையரங்குகளில் கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து நடிக்கனும்
‘சச்சின்’ ரீ -ரிலீஸ் சிறப்புக் காட்சியைப் பார்த்த மிஷ்கின், “இப்பதான் ‘சச்சின்’ படம் முதன்முறையாகப் பார்த்தேன். காலேஜ் வாழ்க்கைக்குத் திரும்பி போய்ட்டு வந்தமாதிரி இருந்தது. ‘யூத்’ படத்துல அவர்கூட வேலை செஞ்சிருக்கேன். அப்போ ரொம்ப யூத்தாக ஹெண்ட்சமாக இருந்தார் விஜய். சச்சின் படத்திலும் அப்படியேதான் இருக்கார். அவரது திரை வாழ்க்கையிலேயே இந்தப் படத்தில் ரொம்ப அழகாக இருக்கார்.
விஜய் கலைத்துறையை விட்டுப் போகமாட்டார். அவர் நடிச்சிட்டே இருப்பார்னு நினைக்கிறேன். கமல், ரஜினி, விஜய், அஜித் கலைத்துறையைவிட்டுப் போனால் இழப்புதான். அவர்கள் எல்லாம் தொடர்ந்து நடிக்கனும். விஜய்க்கு ஒருபக்கம் அரசியல் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி, தொடர்ந்து நடிக்கனும். அதுதான் என்னுடைய விருப்பம்” என்று பேசியிருக்கிறார்.