அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகிவிட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் தெரிவித்தார்.
சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் தலைமைத்துவ பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமைகளில் தலையிடுவது என்பது ஏற்புடையது அல்ல. பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் சில முஸ்லிம் அமைப்புகளை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் வக்பு திருத்த சட்டத்துக்கு ஆதரவாக இருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். இதில் தவெக போன்ற கட்சிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். தாங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துள்ளது. பாஜகவுடன் உறவு வைத்திருக்கும் எந்தக் கட்சியுடனும் எஸ்டிபிஐ கட்சிக்கு எந்த உறவும் இருக்காது. அதிமுக மட்டுமல்ல, பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் எந்தக் கூட்டணியிலும் எஸ்டிபிஐ கட்சி இருக்காது.
தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளன. அதனால் தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமையும் மாநிலத் தலைமையும் சேர்ந்து முடிவெடுக்கும். தனக்கு தேவையென்றால் யார் காலில் வேண்டுமானாலும் பாஜக விழும். தேவையில்லை என்றால் காலை வாரிவிடுவார்கள். அதுதான் அவர்கள் நிலைப்பாடு. தமிழகத்தில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று சொன்ன பாஜக, இப்போது வேறுவழியில்லாமல் திராவிட கட்சி மீது ஏறி சவாரி செய்ய முயற்சி செய்கிறார்கள். இதனால் அவர்களது முழக்கம் என்னவானது என்று தெரியவில்லை.
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாஜகவுடனான கூட்டணியை முறித்துவிட்டு அதிமுக கட்சியையும், அக்கட்சியை நம்பியுள்ள தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.