புதுடெல்லி: ஆரோக்கியமான கல்லீரல் என்பது ஆரோக்கியமான உடலுக்கான அடித்தளம் என்று உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு இன்று (19.04.2025) புதுடெல்லியில் கல்லீரல் – பித்தப்பை அறிவியல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, முதல்வர் ரேகா குப்தா உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அமித் ஷா தனது உரையில், “நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கல்லீரல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும், கல்லீரல் மீளுருவாக்கம் செய்யும் மிகப்பெரிய திறனைக் கொண்டுள்ளது. ஆரோக்கியமான கல்லீரல் ஆரோக்கியமான உடலின் நுழைவாயிலாகும். உலக கல்லீரல் தினமான இன்று, விழிப்புணர்வுடனும் முழுமையான தகவல்களுடனும் தங்கள் ‘கல்லீரலை’ ஆரோக்கியமாக வைத்திருக்க ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும்.
உடலின் தேவைக்கேற்ற தண்ணீர், உணவு, உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றின் மூலம் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய சாதிக்க முடியும். 2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முன் வைத்துள்ளார். சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவில் இந்தியா ஒவ்வொரு துறையிலும் தன்னம்பிக்கை பெற்று உலகை வழிநடத்தும். நல்ல உடல் நலன் மூலமாகவே வளர்ந்த இந்தியா என்ற கோட்பாட்டை நனவாக்க முடியும். இதற்கு ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியமானது.
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களின் ஆரோக்கியத்துக்காக பல திட்டங்களை தொடங்கியுள்ளார். நாம் நோய்வாய்ப்பட்டு விடாமல் இருக்க ஆயுஷ் அமைச்சகம் ஒரு நோய்த் தடுப்பு முறையை உருவாக்கப் பணியாற்றி வருகிறது. இப்போது பெரிய அலோபதி மருத்துவமனைகள் கூட ஆயுஷ் பிரிவுகளைத் திறக்கின்றன. நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான சிகிச்சைக்கான முழு செலவையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏற்றுக்கொள்கிறது.
நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்க மோடி அரசு ரூ. 65 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. ஜெனரிக் மருந்துகளுக்காக, நாட்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மருந்தக மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் 80 சதவீதம் வரை மருந்துகள் மலிவாக கிடைக்கின்றன. இந்திரதனுஷ் இயக்கத்தின் கீழ், பிறந்தது முதல் 15 வயது வரையிலான சிறார்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2014-ல் நாட்டில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்தன. இப்போது இந்த எண்ணிக்கை 23-ஐ எட்டியுள்ளது. 2014-ல் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. இப்போது இது 780 ஆக உள்ளது. 2014-ல் 51 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் இருந்தன. அவை இப்போது 1 லட்சத்து 18 ஆயிரமாக அதிகரித்துள்ளன. மேலும் 75 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளன.
நாட்டு மக்கள் அனைவரும் நல்ல உணவு, போதுமான தண்ணீர், போதுமான தூக்கம், வழக்கமான உடற்பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி மக்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏற்கும்.” என தெரிவித்தார்.