சென்னை: “பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் பொதுமக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் போன்ற பொது ஊழியர்கள் தங்களது கடமையை செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட அதிகாரம் உள்ளது” என ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வர் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் நினைவு அறக்கட்டளை சார்பில் 4-ம் ஆண்டு நீதி மற்றும் சமத்துவத்துக்கான சொற்பொழிவு சென்னையில் நடந்தது. எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வர் பங்கேற்று பேசுகையில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வேளையில் எதற்காக கொண்டாடுகிறோம்? என்ன சாதித்தோம்? என்பதை நமக்கு நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள இதுதான் சரியான தருணம்.
அரசியலமைப்பு சட்டத்தில் சட்டம், நிர்வாகம், நீதித்துறைக்கான அதிகாரங்கள் சமமாக பிரித்து வழங்கப்பட்டுள்ளன. அடிப்படை உரிமைகளை நீக்கி விட்டால் ஆங்கிலேயர் காலத்துக்கும், நமக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும். நாடாளுமன்றம், சட்டப்பேரவை இயற்றும் சட்டங்களை சட்டவிரோதம் என அறிவிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளபோது, ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் போன்ற பொது ஊழியர்கள் தங்களது கடமையை செய்ய வேண்டுமென உத்தரவிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை எனக் கூற முடியாது.
பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் பொதுமக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். ஏனெனில் அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் காகிதத்தில் எழுதப்பட்ட மை அல்ல. அது ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்த தியாகிகளின் ரத்தத்தால் எழுதப்பட்ட ஆவணம். சில ஆயிரம் ரூபாய்க்காக மக்கள் தங்களது வாக்குகளை விற்கக் கூடாது. ஒரு நாட்டில் சட்டத் துறை தோல்வி அடைந்துவிட்டால் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,” என்று பேசினார்.
இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் அக்பர் அலி, சி.டி.செல்வம், ராஜேந்திரன், அமைச்சர் சேகர்பாபு மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்.ஆர். இளங்கோ குடும்பத்தினர் செய்திருந்தனர்.