உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம் என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மற்றும் தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கில் கடந்த 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன்படி மாநில அரசின் மசோதா குறித்து ஆளுநர் ஒரு மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும். மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அண்மையில் கூறும்போது, “குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 142-வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார்.
தற்போது வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதுகுறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அண்மையில் கூறும்போது, “நீதித் துறையும் நாடாளுமன்றமும் பரஸ்பரஸ் மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீதித் துறையில் அரசு தலையிட்டால் என்னவாகும்? அது அவ்வளவு நன்றாக இருக்காது” என்று தெரிவித்தார்.
இந்த சூழலில் பாஜக மூத்த தலைவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடா மக்களவைத் தொகுதி எம்பியுமான நிஷிகாந்த் துபே சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம். நீதிபதிகள் ஒருபோதும் சட்டம் இயற்றும் நாடாளுமன்றவாதியாக முடியாது. இன்றைய சூழலில் எதிர்ப்பை பதிவு செய்வது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
இதே விவகாரம் தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “நாட்டின் மதரீதியிலான போரை உச்ச நீதிமன்றம் தூண்டி வருகிறது. தனது எல்லை வரம்பை தாண்டி உச்ச நீதிமன்றம் செல்கிறது. எல்லாவற்றுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றால் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் எதற்கு? அவற்றை இழுத்து மூடிவிடலாம்” என்று தெரிவித்துள்ளார்