உங்கள் உடலுக்குள் இருக்கிற ஓர் உற்ற தோழமை யார் தெரியுமா? கல்லீரல் என்கிற லிவர் தான் அது. இதயம், மூளை, நுரையீரல் போலவே நம் உடலின் மிக மிக முக்கியமான உறுப்பு. நாம் சாப்பிடும் உணவுகளை செரிக்க பித்த நீரை சுரப்பதில் ஆரம்பித்து, அந்த உணவு மூலமாக கிடைக்கிற ஆற்றலை சேமித்து வைப்பது வரை ஏறத்தாழ 500 வேலைகளை செய்யும் மிகப்பெரிய தொழிற்சாலை இந்த கல்லீரல்.
இப்போது தெரிகிறதா, கல்லீரல் ஏன் நம்முடைய நண்பன் என்று. அப்படிப்பட்ட கல்லீரலை உணவுப்பழக்கங்களின் வழியே எப்படி ஆரோக்கியமாக பராமரிப்பது என்று சொல்கிறார், திருச்சி காவேரி மருத்துவமனையில் இரைப்பைக் குடலியல் நிபுணராக பணிபுரியும் டாக்டர் தினகர் மணி.

’’இன்று (ஏப்ரல் 19) உலக கல்லீரல் தினம். இந்த வருடத்துக்கான தீம் ’உணவே மருந்து’ (Food is Medicine). கல்லீரல் ஹெல்தியாக இருப்பதற்கும், பெரும்பாலான கல்லீரல் பிரச்னைக்கு சரியான தீர்வு காண்பதற்கும், நம்முடைய உணவுப்பழக்கம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
இந்தக் கட்டுரையில், கல்லீரல் பாதுகாப்புப்பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியமான தகவல்களை சொல்லவிருக்கிறேன்.
இரத்த அணுக்கள், நோயெதிர்ப்பு புரதங்கள், ஹார்மோன்கள், நொதிகள், செரிமானத்துக்கான பித்த நீர் ஆகியவற்றை உற்பத்தி செய்யும்.
ரத்தம் உறைவதற்குத் தேவையான சில மூலப்பொருள்களையும் உற்பத்தி செய்கிறது.
நாம் சாப்பிடும் உணவில் இருக்கிற மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மூன்றையும் அரைக்க உதவும். அரைத்ததன் மூலம் கிடைக்கிற சத்துக்களை உடல் உறுப்புகளுக்கு தேவையானபோது வழங்கும்.
சிறுநீரகங்களுடன் சேர்ந்து நம் உடலில் இருக்கிற நச்சுக்களை வெளியேற்றும்.
உடலுக்கு தேவையான வேதியியல் மாற்றங்களையும் உற்பத்தி செய்யும். இப்படி கல்லீரலின் பணிகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

பாதிக்கப்பட்டவர் மிக மிக சோர்வாக உணர்வார். கல்லீரலில் பிரச்னை இருக்கிறது என்பதற்கான மிக முக்கியமான அறிகுறி இதுதான்.
அடுத்த அறிகுறிகள் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும்; சிறுநீரும் மஞ்சள் நிறமாக போகும். தவிர, வயிறும் கால்களும் வீங்க ஆரம்பிக்கும். பிரச்னை முற்றிவிட்டால், ரத்த வாந்தியும் பேசுவதில் மாற்றமும் நிகழலாம்.
நாம் சாப்பிடும் உணவு காரணமாக உடலில் கொழுப்பு அதிகமாகி, தொப்பையாக வயிற்றிலும், ஃபேட்டி லிவராக கல்லீரலிலும் படியும். இது முதல் பிரச்னை.
இரண்டாவதாக நாங்கள் பார்க்கக்கூடிய பிரச்னை, மதுப்பழக்கம் காரணமாக கல்லீரல் வீக்கம் அடையும். அல்லது மதுப்பழக்கம் காரணமாக கல்லீரல் சுருக்கு நோயாகவும் வரலாம்.
மூன்றாவதாக ஹெபடைட்டிஸ் பி, சி போன்ற வைரஸ் தொற்றுகளால் கல்லீரல் பாதிக்கப்படலாம்.
நான்காவது பிரச்னை கல்லீரல் புற்றுநோய். ஆனால், இது வருவது மிக மிக அரிது.

இஞ்சி, பூண்டு, கிராம்பு, மஞ்சள், வால்நட் ஆகியவற்றை உலர்த்தி தனித்தனியாக தூளாக்கி வைத்துக்கொண்டு, தினமும் எல்லாவற்றிலும் சேர்த்து இரண்டு டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால், இயற்கையாகவே நம்முடைய உடலில் ஆன்டி-ஆக்சிடென்ட் அதிகரித்து நோய் எதிர்ப்பு தன்மை கூடுதலாகும். இதனால் கல்லீரல் சார்ந்த வியாதிகள் வராமல் தடுக்க முடியும்.
ஹெபடைட்டிஸ் வைரஸ்கள் காரணமாக கல்லீரலில் வரக்கூடிய தொற்றுகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால், ஆன்டி வைரல் மருந்துகள் (Anti viral medications) மூலம் கல்லீரலை காப்பாற்றி விடலாம்.

மதுப்பழக்கம் காரணமாக கல்லீரலில் வரக்கூடிய பிரச்னைகளை அந்தக் கெட்டப்பழக்கத்தை தவிர்த்தாலே போதும் என்பதைத்தாண்டி வேறு என்ன சொல்லி விட முடியும்.
உங்கள் கல்லீரல் சரியாகத்தான் வேலை பார்க்கிறது என்பதை மூன்று பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும்.
ஒன்று லிவர் ஃபங்ஷன் பரிசோதனை. இந்த பரிசோதனையில் ’அல்புமின்’ என்கிற புரதம் 3.5 முதல் 5.0 g/dL-க்கு மேல் இருக்க வேண்டும்.
இரண்டாவது பிலிரூபின் (bilirubin) பரிசோதனை. இதில், பிலிரூபின் 0.1-1.2 mg/dL-க்குள் இருக்க வேண்டும்.
மூன்றாவது, கல்லீரல் உற்பத்தி சார்ந்த பரிசோதனை (PT/INR). இதன் அளவு 1.2-க்குள் இருக்க வேண்டும்.
இந்த மூன்று பரிசோதனைகளிலும் முடிவு ’நார்மல்’ என வந்தால் உங்கள் கல்லீரல் நன்றாக இருக்கிறது; சிறப்பாக வேலை செய்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

இந்த மூன்றையும் தாண்டி மிக எளிமையாக செய்யக்கூடிய இன்னொரு பரிசோதனை, உங்கள் கல்லீரல் எந்தளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தும். அதன் பெயர் ஃபைப்ரோ ஸ்கேன் (Fibroscan). மருத்துவ வளர்ச்சி நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் என்று இதை குறிப்பிடலாம். வழக்கமான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போலவே இந்தப் பரிசோதனையை செய்யலாம். இதன் மூலம் வெறும் 30 விநாடிகளில் கல்லீரல் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை தெளிவாக கண்டுபிடித்துவிட முடியும்.
பெரும்பாலும் கல்லீரல் பிரச்னைக்கு காரணங்களான, நீரிழிவு, ரத்த அழுத்தம், தைராய்டு சிறுநீரகப்பிரச்னை, ஃபேட்டி லிவர் என எல்லாவற்றுக்கும் மூலகாரணம் மாவுச்சத்து அதிகமாக எடுத்துக் கொள்வதுதான். அதனால், மாவுச்சத்து மிகுந்த உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக, அதிகப்படியான புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் கல்லீரல் சார்ந்த பிரச்னைகள் வராமல் தவிர்க்க முடியும். சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால், நம்முடைய ஒவ்வொரு வேளை உணவிலும் மூன்றில் ஒரு பங்கு மாவுச்சத்து, இன்னொரு பங்கு புரதச்சத்து, மூன்றாவது பங்கு நார்ச்சத்து என பார்த்துக்கொண்டால் நம்முடைய கல்லீரல் எந்நாளும் ஆரோக்கியமாகவே இருக்கும்.

மேலேயுள்ள கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கல்லீரல் சார்ந்த சந்தேகங்கள், பிரச்னைகள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ இருக்கும்பட்சத்தில், டாக்டர் தினகர் மணி அவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கான அப்பாயின்ட்மென்ட் லிங்க் இதோ: https://www.kauveryhospital.com/doctors/trichy-tennur/gastroenterology/dr-thinakar-mani/