சென்னை: குலக்கல்வியை ஊக்குவித்ததால் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்ததாகவும், ‘கலைஞர் கைவினைதிட்டம்’ சமூக நீதி, சமநீதி, மனித நீதியை நிலைநாட்டும் திட்டமாக இருப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ‘கலைஞர் கைவினை திட்ட’த்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது: ‘கலைஞர் கைவினை திட்டம்’ சமூக நீதி, சமநீதி, மனித நீதி, மனித உரிமை நீதியை நிலைநாட்டக் கூடிய திட்டமாகும். மத்திய பாஜக அரசு கடந்த 2023-ம் ஆண்டு ‘விஸ்வகர்மா’ திட்டத்தை கொண்டுவந்தது. 18 வகையான கைவினைக் கலைஞர்களுக்கு, திறன் பயிற்சி வழங்கி, ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் என்று கூறினர்.
எந்தத் திட்டமாக இருந்தாலும், அது சமூகநீதியை, சமத்துவத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் இருக்க வேண்டும். ஆனால், அந்தத் திட்டம், குலத்தொழில்முறையை வெளிப்படையாக ஊக்குவிப்பதாக இருந்ததால் அதை கடுமையாக எதிர்த்தோம்.
புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் பள்ளி முடித்த அனைவரும் உயர்கல்விக்குப் போவதை உறுதி செய்ய வேண்டும் என்று நாம் பாடுபடுகிறோம். ஆனால், பாஜக அரசோ குலத் தொழிலை ஊக்குவிக்கப் பாடுபடுகிறது. ‘நான் முதல்வன்’ திட்டத்தில், எதிர்கால உலகத்தை எதிர்கொள்ளத் தேவையான திறன் பயிற்சிகளை கொடுத்து, நம்முடைய குழந்தைகள் பெரிய, பெரிய நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், குடும்பத் தொழிலில் பயிற்சி கொடுத்து, அவர்கள் வெளி உலகத்தையே பார்க்கக் கூடாது என பாஜக நினைக்கிறது.
எனவே, அத்திட்டத்தில் முக்கிய மாற்றங்களைச் செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அதை ஏற்க மறுத்துவிட்டனர். இதனால், பிரதமரின் ‘விஸ்வகர்மா’ திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என்று தெரிவித்து விட்டோம். அதைத்தொடர்ந்து, பாகுபாடு காட்டாத ஒரு திட்டமாக உருவானதுதான் ‘கலைஞர் கைவினைஞர் திட்டம்’. இதில் 25 வகையான திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. விரும்பிய தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
இந்தத் திட்டத்தில், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இதுவரை 24,907 விண்ணப்பங்கள் வந்துள்ளன. வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 8,951 பயனாளிகளுக்கு ரூ.170 கோடி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் இன்று மாபெரும் வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்று சொன்னால், பெரிய நிறுவனங்களால் மட்டுமே இந்த வளர்ச்சி வந்துவிடவில்லை. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களாலும்தான் இந்த வளர்ச்சியை நாம் சாத்தியமாக்கி இருக்கிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் வளர்ந்துள்ளன. அவை பெருந்தொழில்களுக்கு துணையாக இருந்து நாட்டின் ‘இன்க்ளூசிவ்’ மற்றும் ‘ஆல்-ரவுண்ட்’ சமூக வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிக்கிறது. உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி அந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதால், மக்கள் வேலைதேடி தொலைதூரங்களுக்கு இடம் பெயர்வது பெருமளவு தடுக்கப்படுகிறது.
இந்த தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில், இந்தியாவிலேயே 3-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 33 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் மொத்த எண்ணிக்கையில் இது 9.4 சதவீதம்.
கைவினைக் கலைஞர்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து அவர்கள் வளர்ச்சிக்காக, ‘பூம்புகார்’ நிறுவனத்தை முதல்வராக இருந்த கருணாநிதி கடந்த 1973-ல் ஆண்டு தொடங்கி வைத்தார். 2025-ல் அவர் பெயரில் ‘கலைஞர் கைவினை திட்ட’த்தை நான் தொடங்கி வைக்கிறேன். ஏதோ தொழில் தொடங்கினோம், வாழ்க்கையை நடத்தினோம் என்று இல்லாமல், நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அளவுக்கு நீங்கள் உயர வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.