புதுடெல்லி,
வங்காளதேசத்தில் சமீப காலமாக சிறுபான்மையின மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், வங்காளதேசத்தின் வடக்குப்பகுதியில் உள்ள தினாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த இந்து மத தலைவர் பபேஷ் சந்திர ராய் 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தி, கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்து தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் இந்து மத தலைவர் பாபேஷ் சந்திர ராய் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட செய்தி துயரம் அளிக்கிறது. இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். முந்தைய குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின்றி சுற்றித் திரிகின்றனர். இந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம், மேலும் சாக்குப்போக்குகளை கூறாமல், பாகுபாடு இன்றி இந்துக்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரையின் பாதுகாப்பை இடைக்கால அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.