புதுடெல்லி: டெல்லியில் உள்ள முஸ்தபாபாத் பகுதியில் இன்று காலையில் நடந்த கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் பட்டியலை டெல்லி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அந்தப்பட்டியலின் படி, உயிரிழந்தவர்களில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் உரிமையாளரும் இருப்பது உறுதியாகியுள்ளது. உயிரிழந்த 11 பேரில் 8 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களில் மூன்று பேர் பெண்கள். நான்கு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
போலீஸாரின் பட்டியலின் படி, இடிபாடுகளில் சிக்கி 11 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 6 பேர் சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். 5 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியிருக்கும் எஞ்சியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அதிகாலையில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்: தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் இந்தச் சம்பவம் அதிகாலை 3 மணி அளவில் நடந்துள்ளது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் அந்த இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று, மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரி ராஜேந்திர அத்வால் கூறுகையில், “எங்களுக்கு அதிகாலை 3 மணி அளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக நாங்கள் இங்கு விரைந்து வந்தோம். இந்த நான்கு மாடி கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது. இதன் இடிபாடுகளில் மக்கள் சிக்கி உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர் ரேகா குப்தா, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “முஸ்தபாபாத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த துயர சம்பவத்தால் மனம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
DDMA, NDRF, DFS மற்றும் பிற நிறுவனங்கள் தொடர்ந்து நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. காயமடைந்த அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் இறந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு கடவுள் சாந்தியை அளிப்பாராக. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் வலிமையை, அவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு இறைவன் அளிக்கட்டும்.” என தெரிவித்துள்ளார்.