புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘‘ ஊழலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் கையும், களவுமாக சிக்கியுள்ளது’’ என கூறினார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில், ரூ.5,000 கோடி அளவுக்கு சொத்துக்களை, யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கடந்த 9-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதனால் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த நடவடிக்கையை அரசியல் பழிவாங்கும் செயல் என கூறியுள்ள காங்கிரஸ் தலைவர்கள், அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கலை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். நாடுமுழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும் எனவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி அவ்வப்போது மீண்டும் எழுச்சி பெற முயன்று தோல்வியடைகிறது.
நேஷனல் ஹெரால்டு பற்றி நாம் பேசும்போதெல்லாம், அது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் கையும், களவுமாக சிக்கியுள்ளதால், காங்கிரஸ் கட்சியினர் பதற்றம் அடைகின்றனர். காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை பார்த்தால், சுதந்திரம் பெற்றதில் இருந்து பல ஊழல்களில் காங்கிரஸ் சிக்கியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வாராந்திர பத்திரிகையாக உள்ளது. ஆனால் அதை யாரும் படிப்படிதில்லை. அது அச்சிடப்படுவதும் இல்லை. நேஷனல் ஹெரால்டு செய்தியாளர்களை நான் பார்த்ததே இல்லை.
ஆனால், இதற்கு தினசரியைவிட அதிக நிதி வருகிறது. இந்த இதழுக்காக பல மாநிலங்களில் சொத்துக்கள் மானியத்தில் அளிக்கப்பட்டுள்ளன. இதுதான் காங்கிரஸ் மாடல் ஊழல். இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறினார்.