முர்ஷிதாபாத்: மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத்துக்கு சென்று வந்த பின்பு பேசிய அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், “அங்கு நடந்தது காட்டுமிராண்டித்தனமானது; அதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்துக்கு சனிக்கிழமைச் சென்றார். அங்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தப் பின்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், “அங்கு என்ன நடந்தவை எல்லாம் காட்டுமிராண்டித்தனமானது, வினோதமானது. இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் மீண்டும் நிகழக் கூடாது. மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். அங்கு இயல்பு நிலை மீண்டும் கொண்டுவரப்படவேண்டும். நம்மைப் பாதுகாக்க ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்கள் வைத்த பல கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானது, அங்கு நிரந்தர பிஎஸ்எஃப் முகாம் அமைக்கப்பட வேண்டும் என்பது ஒன்று” என்று தெரிவித்தார். முன்னதாக, இன்று முர்ஷிதாபாத் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக ஆளுநர் ஆனந்த போஸ் துலியன் பகுதிக்கு வந்தார்.
அதேபோல், முர்ஷிதாபாத்தின் பெட்போனா நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, குறிப்பாக பெண்களை தேசிய மகளிர் ஆணையக் குழு இன்று சந்தித்தது. தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் தலைமையிலான இக்குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டனர். அவர்கள் மத்தியில் பேசிய விஜயா ரஹத்கர், “துயரமான இந்த தருணத்தில் உங்களோடு நாங்கள் இருக்கிறோம் என்ற செய்தியை உங்களுக்குக் கூறவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். தயவுசெய்து கவலைப்பட வேண்டாம்.
நாடும் தேசிய மகளிர் ஆணையமும் உங்கள் அனைவருக்கும் பக்கபலமாக இருக்கிறது. நீங்கள் தனித்துவிடப்படவில்லை. அவ்வாறு உணர வேண்டாம். உங்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும்.” என்று கூறினார்.
முன்னதாக, வக்பு சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 11-ம் தேதி மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத் உள்ளிட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. அங்குள்ள இந்துக்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். பல குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. பலர் அண்டை மாநிலமான ஜார்க்கண்டின் பாகூர் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தனர். மால்டாவில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலும் ஏராளமானோர் தஞ்சமடைந்துள்ளனர்.