18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இத்தொடரின் 36வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல் 19) ஜெய்பூரில் நடைபெற்றது. இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. சஞ்சு சாம்சனுக்கு கடந்த போட்டியின் போது காயம் ஏற்பட்ட காரணத்தால் இப்போட்டியில் பங்கேற்கவில்லை. அவர் இல்லாததால், ரியான் பராக் அணியை வழி நடத்தினார்.
இரவு 7 மணிக்கு போட்டியின் டாஸ் வீசப்பட்டது. டாஸை வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்வதாக கூறினார். அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் களம் இறங்கினர். இந்த தொடரில் இதுவரை நல்ல தொடக்கத்தை கொடுத்து வந்த இந்த கூட்டணி இப்போட்டியில் அதை செய்ய தவறியது.
மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து களத்திற்கு வந்த நிகோலஸ் புரான் 11 ரன்களிலும் ரிஷப் பண்ட் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 54 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இக்கட்டான சூழலில் இருந்தது. இச்சூழலில் இம்பேக்ட் வீரராக ஆயூஸ் பதோனி, மார்க்ரமுடன் கைக்கோர்த்தார். இந்த கூட்டணி அணிக்கு ரன்களை சேர்த்தது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தனர். ஒரு கட்டத்தில் மார்க்ரம் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். அதையடுத்து பதோனியும் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. அப்துல் சமாத் 30 ரன்களுடனும் மில்லர் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஹசரங்கா 2 விக்கெட்களை வீழ்த்தினார். மற்ற பந்து வீச்சாளர்களான ஆர்ச்சர், சந்தீப் சர்மா, துஷர் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்சி களம் இறங்கினர். வைபவ் சூர்யவன்சிக்கு 14 வயதே ஆகிறது. இதன் மூலம் அவர் ஐபிஎல் போட்டியை விளையாடும் இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் சூர்யவன்சி தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்சரை பறக்கவிட்டார். ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து அதிரடியாக விளையாடினார்.
முதல் விக்கெட்டை இழக்கவே 85 ரன்கள் தேவைப்பட்டது. சூர்யவன்சி 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து நிதீஸ் ராணா 8 ரன்களில் ஆட்டமிழக்க, ரியான் பராக் ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து ரன்களை சேர்த்தார். இந்த கூட்டணி 62 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 74 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவரை அடுத்து பராக் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் ராஜஸ்தான் ராயல்ஸ் பக்கமே ஆட்டம் இருந்தது. ஆனால் ஹெட்மேயர் அணிக்கு வெற்றியை பெற்று தராமல் சொதப்பினார். லக்னோ அணீயின் பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் சிறப்பாக பந்து வீசினார். இதனால், பேட்டர்கள் விக்கெட்டை இழக்க, இறுதி வரை பரபரப்பாக சென்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஆவேஷ் கான் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
மேலும் படிங்க: பட்லர், ரூதர்ஃபோர்ட் அதிரடி ஆட்டம்.. முதல் இடத்திற்கு முன்னேறிய குஜராத் அணி!
மேலும் படிங்க: SRH-ன் மோசமான விளையாட்டிற்கு காரணம் இதுதான்.. போட்டுடைத்த மைக்கேல் கிளார்க்!