புதுடெல்லி: வங்கதேசத்தில் பபேஷ் சந்திர ராய் என்ற இந்து தலைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஷ்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வங்கதேசத்தில் இந்து சிறுபான்மைத் தலைவரான பபேஷ் சந்திர ராய் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை நாங்கள் துயரத்துடன் பார்க்கிறோம்.
வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் திட்டமிட்டு துன்புறுத்தப்படுவது ஒரு வழக்கமாக இருப்பதை இந்த கொலை உணர்த்துகிறது. இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்களைச் செய்தவர்கள் தண்டனையின்றி சுற்றித் திரிகிறார்கள்.
இந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். சாக்குப்போக்குகளை கண்டுபிடிக்காமல் அல்லது பாகுபாடு காட்டாமல் இந்துக்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் பொறுப்பை இடைக்கால அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபேஷ் சந்திர ராய் கொலை: வங்கதேசத்தின் தினாஜ்பூர் மாவட்டத்தில் பசுதேப்பூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் 58 வயதான பாபேஷ் சந்திர ராய். இவர் வங்கதேச பூஜா உத்ஜபன் பரிஷத் என்ற அமைப்பின் பீரால் பகுதிக்கு துணைத் தலைவராக இருந்துள்ளார். மேலும், அப்பகுதியில் உள்ள இந்து சமூகத்தின் முக்கிய தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பாபேஷ் சந்திர ராய் வீட்டுக்குள் நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை கடத்திச் சென்று கடுமையாக தாக்கியுள்ளது. பின்னர் அவர் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாபேஷ் சந்திர ராயின் மனைவி சாந்தனா, “மாலை 4:30 மணியளவில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் வீட்டில் இருப்பதை உறுதிப்படுத்த குற்றவாளிகள் அதை செய்துள்ளனர். சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, நான்கு பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்து எனது கணவரை கடத்திச் சென்றனர். நராபரி கிராமத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட அவர் அங்கு கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
அவர் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டபோது மயக்கமடைந்திருந்தார். அவரை தினாஜ்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். இருப்பினும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.” என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள பீரால் காவல் நிலைய பொறுப்பாளர் அப்துஸ் சபூர், “இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கண்டனம்: இதனிடையே, வங்கதேசத்தின் தினாஜ்பூரில் பபேஷ் சந்திர ராய் கொடூரமாக கொல்லப்பட்டதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வங்கதேசத்தின் தினாஜ்பூரில் இந்து சமூகத்தின் முக்கிய தலைவரான பபேஷ் சந்திர ராயின் கொடூர கொலையை இந்திய தேசிய காங்கிரஸ் கடுமையாகக் கண்டிக்கிறது. அவரது துயர மரணத்திற்கு வழிவகுத்த கடத்தல் மற்றும் தாக்குதல், அப்பகுதியில் மத சிறுபான்மையினரிடையே வளர்ந்து வரும் பாதுகாப்பின்மையை உணர்த்துகிறது.
இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல. கடந்த மாதங்களாக, வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகங்கள் மீது தொடர்ச்சியான மற்றும் ஆழ்ந்த கவலையளிக்கும் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்து கோயில்களை அவமதிப்பது முதல் சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் வணிகங்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் வரை நடந்துள்ளன. இந்த மிருகத்தனமான செயல்களை புறக்கணிக்க முடியாது.
வங்கதேசத்தில் மத சிறுபான்மையினரின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். வங்கதேசத்தில் உள்ள இந்து சமூகத்துடனும், மதச்சார்பின்மை, நீதி மற்றும் மனித உரிமைகளில் நம்பிக்கை கொண்ட அனைவருடனும் இந்திய தேசிய காங்கிரஸ் ஒற்றுமையுடன் நிற்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.