ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் அடுத்த மாதம் இந்திய வீரர் சுபான்சு சுக்லா விண்வெளி மையம் செல்கிறார்

‘‘இந்திய விண்வெளி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அடுத்த மாதம் செல்கிறார்’’ என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

இந்திய விமானப்படை பைலட் குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா உட்பட சிலரை , ககன்யான் திட்டத்தில் விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ தேர்வு செய்தது. அவர்கள் ரஷ்யா சென்று விண்வெளி பயணத்துக்கான பயிற்சிகளை பெற்றனர். இந்நிலையில் ககன்யான் திட்டத்துக்கு முன்பாக இந்திய வீரர்களில் ஒருவரை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இதற்காக நாசா மற்றும் ‘ஆக்ஸியாம் ஸ்பேஸ்’ என்ற தனியார் விண்வெளி நிறுவனத்தில் பயிற்சி பெற இந்தியா 60 மில்லியன் டாலர் செலுத்தியது. இத்திட்டத்துக்கு இந்திய வீரர்களில் குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா தேர்வானார். கடந்த 8 மாதங்களாக இவர் அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஆக்ஸியாம்-4 குழுவினர், ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில், சர்வதேச விண்வெளி மையத்துக்கு அடுத்த மாதம் செல்கின்றனர். இந்த விண்கலத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து எடுத்துச் செல்கிறது.

ஆக்ஸியாம்- 4 குழுவின் கமாண்டராக நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்ஸன் இருப்பார். போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் ஊசான்ஸ்கி ஐரோப்பிய விண்வெளி மையம் சார்பில் செல்கிறார். இவருடன் ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் காபு என்ற வீரரும் செல்கிறார். இந்திய வீரர் குரூப் கேப்டன் சுக்லா, ஆக்ஸ்யாம்-4 திட்டத்தின் பைலட்டாக பணியாற்றுவார்.

இதன் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் முதல் இந்திய வீரர் என்ற பெயர் குரூப் கேப்டன் சுக்லாவுக்கு கிடைக்கவுள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இந்தியாவின் ராகேஷ் சர்மா கடந்த 1984-ம் ஆண்டில் ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். அதன்பின் 40 ஆண்டு கழித்து, இந்திய வீரர் விண்வெளிப் பயணம் மேற்கொள்கிறார்.

இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், ‘‘ அடுத்த விண்வெளி சாதனைக்கு இந்தியா தயார். ககன்யான் போன்ற திட்டங்களுக்காக , சர்வதேச நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்படுவது, விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக வர வேண்டும் என்ற இந்தியாவின் உறுதியை பிரதிபலிக்கிறது. இந்த முயற்சிகள் அறிவியல்பூர்வமானது மட்டும் அல்ல வளர்ந்த மற்றும் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்கை அடைவதற்கும்தான்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.