நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகவும் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் இந்த அணி நன்றாக விளையாடியதால், இந்த ஆண்டு அந்த அணி மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் அந்த அணி தொடர்ந்து சொதப்பி வருவதால் அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
டிரவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன், நிதிஷ் ரெட்டி என வரிசையாக அதிரடியான பேட்ஸ்மேன்கள் இருந்தும் அந்த அணி ஸ்கோர் செய்வதில் தடுமாறி வருகிறது. அதிலும் டிரவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடினால் மட்டுமே அந்த அணி வெற்றி பெறுகிறது. வெற்றி பெற இரண்டு போட்டிகளுமே அப்படிதான். இருவரும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தால், மிடில் ஆர்டர் பேட்டர்கள் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்ய தவறுகிறார்கள்.
மும்பை இந்தியன்ஸ் எதிரான கடந்த போட்டியில் இதுதான் நடந்தது. பேட்டிங்கிற்கு சாதகமான அந்த பிட்ச்சில் கூட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த போட்டியில் தொடக்க வீரர்களான டிரவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த பின்னர், மிடில் ஆர்டர் பேட்டர்கள் விரைவாக விக்கெட்களை இழந்தனர். இதனால் அந்த அணி பெரிய டார்கெட்டை நிர்ணயிக்க தவறினர். அந்த போட்டியில் மும்பை அணி எளிதாக வெற்றி பெற்றது.
இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மோசமான செயல்பாடு குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் பேசி உள்ளார். அவர், “இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் ஒரே மாதிரியான விஷயங்கள் நடப்பதைப் பார்க்கிறேன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால், அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கை எடுத்துச் செல்வதில்லை. ஒரு நல்ல தொடக்கத்தை வைத்து வேகமாக ஸ்கோரை உயர்த்துவது, பார்ட்னர்ஷிப்களை அமைப்பது, இன்னிங்ஸை முன்னோக்கி எடுத்துச் செல்வது ஆகியவற்றை அவர்கள் (மிடில் ஆர்டர்) இன்னும் சரியாகச் செய்யவில்லை. அதை எப்படிச் செய்ய வேண்டும் என அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.”
“ஒவ்வொரு போட்டியிலும் தொடக்க வீரர்களை மட்டுமே நீங்கள் நம்பியிருக்க முடியாது. டிராவிஸ் ஹெட் & அபிஷேக் ஷர்மா கடந்த ஆண்டு பல போட்டிகளில் நன்றாக விளையாடி உள்ளார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் அது நடக்காது. இப்போது அவர்களின் மிடில் ஆர்டர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் ஆட்டத்தை நிரூபிக்க வேண்டும். ஆனால், மிடில் ஆர்டர் வீரர்கள் யாரும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த விஷயத்தில்தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முன்னேற்றம் காண வேண்டும்” என்றார்.
மேலும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த பக்கா பிளான் போட்ட தோனி..!!
மேலும் படிங்க: ஆர்சிபி அணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்திருக்கும் வரலாற்று சோகம்..!