உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய மின்கட்டணத்துக்கான தாமதக் கட்டணத்தை தள்ளுபடி செய்யக் கோரி மின்வாரியம் தாக்கல் செய்த மனுவை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தள்ளுபடி செய்தது. அத்துடன், அரசு அலுவலகங்களில் ப்ரீபெய்டு மீட்டர்களைப் பொருத்தவும் உத்தரவிட்டுள்ளது.
வீடுகளில் மின்பயன்பாடு கணக்கெடுத்த நாளில் இருந்து 20 தினங்களுக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில் மின்விநியோகம் துண்டிக்கப்படும். தாமதக் கட்டணத்துடன் சேர்த்து மின் கட்டணம் செலுத்தியதும் மின்சாரம் வழங்கப்படும்.
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றை உள்ளடக்கிய உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் விநியோகம், தெருவிளக்கு போன்ற சேவைகளை செய்கின்றன. இதனால், மின்பயன்பாடு கணக்கெடுத்த நாளில் இருந்து மின்கட்டணம் செலுத்த 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. எனினும், உள்ளாட்சி அமைப்புகள் குறித்த காலத்தில் மின்கட்டணம் செலுத்துவதில்லை. அதற்காக, மின் விநியோகம் துண்டிக்கப்படுவதும் இல்லை.
கடந்த 2023 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ரூ.1,481 கோடி மின்கட்டணம் மற்றும் அதற்கான தாமத கட்டணம் ரூ.137 கோடி என மொத்தம் ரூ.1,618 கோடி மின்வாரியத்துக்கு செலுத்தாமல் உள்ளாட்சி அமைப்புகள் நிலுவை வைத்துள்ளன. மேலும், தாமதக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வலியுறுத்தின. அதனடிப்படையில், தாமதக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய கோரிய மனுவை ஆணையத்திடம் மின்வாரியம் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த ஆணையம் தாமதக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக, ஆணையம் சமீபத்தில் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘உள்ளாட்சி அமைப்புகள் நிலுவையில் வைத்துள்ள மின்கட்டணம், நிலுவைக் கட்டணம் ரூ.1,618 கோடியை வசூலிக்க வேண்டும். மேலும், அரசு அலுவலகங்களில் பணம் செலுத்தியதற்கு ஏற்ப மின்சாரம் பயன்படுத்தும், பிரிபெய்ட் மீட்டர் பொருத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.