உத்தவ் தாக்கரே- ராஜ்தாக்கரே இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சிதான்: தேவேந்திர பட்னாவிஸ்

மும்பை,

‘மண்ணின் மைந்தர்’ கொள்கையுடன் பால் தாக்கரே தொடங்கிய சிவசேனாவில் அவரது மகன் உத்தவ் தாக்கரேவும், தம்பி மகன் ராஜ் தாக்கரேவும் முக்கிய பொறுப்பில் இருந்தனர்.இரு சகோதரர்கள் இடையே அரசியல் பயணத்தில் கருத்து வேறுபாடு உருவானது.

ராஜ் தாக்கரே 2005-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து விலகினார். அவர் 2006-ம் ஆண்டு நவநிர்மாண் சேனா கட்சியை தொடங்கினர். சிவசேனாவில் இருந்து விலகிய பிறகு, அதற்கு உத்தவ் தாக்கரே தான் காரணம் என ராஜ் தாக்கரே குற்றம்சாட்டினார்.அன்று முதல் சிவசேனாவும், நவநிர்மாண் சேனாவும் எதிரும், புதிருமாக உள்ளன. பெரும்பாலும் பிரிந்த தாக்கரே சகோதரர்கள் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை கூட தவிர்த்து வந்தனர். பால் தாக்கரே மரணம் போன்ற குறிப்பிடத்தகுந்த சில நிகழ்ச்சிகளில் மட்டுமே 2 பேரும் ஒன்றாக கலந்து கொண்டனர். ஆனால் 2 பேரும் நேரில் சந்திப்பதை தவிர்த்து வந்தனர்.

எனினும் சிவசேனா, நவநிர்மாண் சேனா தேர்தல்களில் பின்னடைவை சந்திக்கும் போது பிரிந்த தாக்கரே சகோதரர்கள் சேர வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கும். நவநிர்மாண் சேனா தொடங்கப்பட்ட காலத்தில் பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது. தற்போது அந்த கட்சி ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத செல்வாக்கு இழந்த கட்சியாக உள்ளது.

இதேபோல கடந்த 2022-ம் ஆண்டு ஏக்நாத் ஷிண்டே வசம் சிவசேனா சென்றது. ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே அரசியலில் பின்னடவை சந்தித்து வரும் நிலையில் அவர்கள் ஒன்றிணைய வேண்டும் என மீண்டும் குரல்கள் ஒலிக்க தொடங்கின. மேலும் சமீபகாலமாக உத்தவ், ராஜ் தாக்கரே குடும்ப நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதை காண முடிந்தது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மராட்டிய அரசு 1 முதல் 5-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயம் ஆக்கியது. இதற்கு ராஜ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்தார். இதேபோல உத்தவ் தாக்கரேவும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்தநிலையில் 2 பேரும் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து இருப்பது மராட்டிய அரசியலில் பரபரப்பையும், திருப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து ராஜ் தாக்கரே, கூறுகையில், “எனக்கு மராட்டிய மாநிலத்தின் நலன் தான் முக்கியம். அதற்கு முன் மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சம் தான். அதற்காக சின்ன சின்ன பிரச்சினைகளை தள்ளி வைத்துவிட்டு உத்தவ் தாக்கரே உடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். அதற்கு அவர் தயாரா?” என கேட்டிருந்தார்.

இதையடுத்து பேசிய உத்தவ் தாக்கரே, “மராத்தி மொழி மற்றும் மராட்டிய மாநில நலனுக்காக சின்ன பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ராஜ் உடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என்று கூறி இருந்தார். உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரேவின் இந்த திடீர் மனமாற்றம் காரணமாக அவர்களின் 20 ஆண்டு கால அரசியல் பகை முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இணைந்து செயல்பட்டால் தங்களுக்கு மகிழ்ச்சிதான் என மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- அவர்கள் இருவரும் ஒன்றிணைவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் இணைவதில் யாரும் வருத்தப்பட எந்தக் காரணமும் இல்லை. ஒருவர் அழைப்பு விடுக்க, அதற்கு மற்றொருவர் பதில் தந்துள்ளார். அதில் நாங்கள் ஏன் தலையிட வேண்டும்?” எனக் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.