மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய புள்ளிகளாக உள்ள உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் மீண்டும் ஒன்றிணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது தங்களுக்கு மகிழ்ச்சி என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
“அவர்கள் இருவரும் ஒன்றிணைவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் இணைவதில் யாரும் வருத்தப்பட எந்தக் காரணமும் இல்லை. ஒருவர் அழைப்பு விடுக்க, அதற்கு மற்றொருவர் பதில் தந்துள்ளார். அதில் நாங்கள் ஏன் தலையிட வேண்டும்?” என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
அண்மையில் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜ் தாக்கரே, பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது: “எனக்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் நலன் தான் முக்கியம். அதற்கு முன் மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சம் தான். அதற்காக சின்ன சின்ன பிரச்சினைகளை தள்ளி வைத்துவிட்டு உத்தவ் தாக்கரே உடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். அதற்கு அவர் தயாரா?” என கேட்டிருந்தார்.
“மராத்தி மொழி மற்றும் மகாராஷ்டிரா மாநில நலனுக்காக சின்ன பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ராஜ் உடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன். அவர் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு எதிரான கட்சிகளுடன் பயணிக்க கூடாது. சத்ரபதி சிவாஜி மகாராஜின் முன் உறுதிமொழி ஏற்க வேண்டும்” என உத்தவ் தாக்கரே கூறி இருந்தார்.
உத்தவ் தாக்கரேவின் தந்தை பால் தாக்ரேவின் சகோதரர் மகன் தான் ராஜ் தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது. 2006-ம் ஆம் ஆண்டு வரையில் ராஜ் தாக்கரே சிவ சேனா கட்சியில் இருந்தார். அதன் பின்னர் நவ நிர்மாண் சேனா கட்சியை நிறுவினார். தற்போது சிவ சேனா இரண்டு பிரிவுகளாக உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.