Mumbai team owner Match Fixing : ஐபிஎல் 2025 தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மேட்ச் பிக்சிங் தொடர்பான முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. மும்பையில் நடக்கும் டி20 லீக் போட்டியில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட முயன்றதாக அந்த தொடரில் பங்கேற்கும் அணியின் உரிமையாளருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்துள்ளது. மும்பையில் லோக்கல் டி20 லீக் போட்டிகள் ஐபிஎல் தொடரைப் போல் நடத்தப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா காரணமாக நடக்காமல் இருந்த அந்த தொடர் இந்த ஆண்டு முதல் மீண்டும் நடக்கிறது. இந்த சூழலில் அந்த தொடரில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட முயன்றதாக குர்மீத் சிங் பாம்ராவுக்கு (Gurmeet Singh Bhamra) பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்திருக்கிறது.
அவர், மும்பை T20 லீக்கின் சோபோ சூப்பர்சோனிக்ஸ் (SoBo Supersonics) அணியின் கோ-ஓனராக இருந்தவர். அந்த அணியில் இந்திய அணிக்காக விளையாடிய தவால் குல்கர்னி (Dhawal Kulkarni) மற்றும் பாவின் தக்கர் (Bhavin Thakkar) ஆகியோர் விளையாடினர். அவர்கள் இருவரிடமும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுமாறு குர்மீத் சிங் பாம்ரா கேட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இது தொடர்பான புகார் பிசிசிஐ கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆன்டி கரப்ஷன் ஆணையம் விசாரிக்கத் தொடங்கியது. ஓய்வுபெற்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நடந்த விசாரணையின் முடிவில் குர்மீத் சிங் பாம்ரா மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட முயன்றது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் இந்த கடும் நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அதனால் இனி குர்மீத் சிங் பாம்ரா இந்தியாவில் கிரிக்கெட் தொடர்பாக எந்த விதமான செயல்பாடுகளிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடமுடியாது. கிரிக்கெட் சார்ந்து அவருடன் தொடர்பு வைத்துக் கொள்பவர்களும் சிக்கலுக்கு உள்ளாவார்கள். இவர் கனடாவில் நடக்கும் டி20 லீக்கிலும் ஒரு அணியின் கோ-ஓனராக இருக்கிறார். பிசிசிஐ பொறுத்தவரை மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்சிங் புகார் எழுந்து கடுமையான பிரச்சனைகளை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சந்தித்தன.
இந்த சூழலில் இப்படியொரு பிரச்சனையில் ஒருவர் சிக்கியிருப்பது மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இப்படியான முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கும் குர்மீத் சிங் பாம்ரா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கடும் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது.