Vaibhav Suryavanshi, IPL 2025: ஐபிஎல் தொடரில் நேற்று 14 வயதில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே 20 பந்துகளுக்கு 34 ரன்களை அடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறார், வைபவ் சூரியவன்ஷி. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைபவ் சூர்யவன்ஷியை, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஓப்பனிங்கில் இறக்கியது எனலாம்.
Vaibhav Suryavanshi: மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி
சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்தே சூர்யவன்ஷி அணிக்குள் வந்தார். 14 வயதான இவரை கடந்தாண்டு நடந்த மெகா ஏலத்தில் ராஜஸ்தான் அணி 1.1 கோடி ரூபாய்க்கு எடுத்தது. இவர் நேற்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தார். சூர்யவன்ஷி 2 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸரை அவரது இன்னிங்ஸில் அடித்திருந்தார்.
சிறுவனாக இருந்தாலும் ஆவேஷ் கான், ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் பவுண்டரியை பறக்கவிடும் அளவிற்கு வலுவான வீரராக தோற்றமளித்தார். இவரும் ஜெய்ஸ்வாலும் சேர்ந்த ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் 85 ரன்களை சேர்த்திருந்தனர். அற்புதமான தொடக்கம் கிடைத்தாலும் மோசமான ஃபினிஷிங்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
Vaibhav Suryavanshi: இந்த உணவுகளை தியாகம் செய்த வைபவ்
இந்நிலையில், ஐபிஎல் தொடருக்கு வைபவ் சூர்யவன்ஷி தயாரானது குறித்து அவரது பயிற்சியாளர் மனீஷ் ஓஜா தெரிவித்ததாவது,”அவரை மட்டன் சாப்பிட அனுமதிக்கவில்லை. பீட்சாவையும் அவரது டயட்டில் இருந்து நீக்கவிட்டோம். அவருக்கு சிக்கன், மட்டன் மிகவும் பிடிக்கும்.
சிறுவர் என்பதால் அவருக்கு பீட்சா ரொம்பப் பிடிக்கும். ஆனால் இப்போது அவர் அதை சாப்பிடுவதில்லை. நாங்கள் அவருக்கு மட்டன் கொடுத்தால், எவ்வளவு கொடுத்தாலும், அவர் அதை முழுவதுமாக சாப்பிட்டுவிடுவார். அதனால்தான் அவர் பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டாகத் தெரிகிறார்.
Vaibhav Suryavanshi: லாரா + யுவராஜ்
அவர் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அவர் இன்னிங்ஸைத் தொடங்கிய விதத்தை நாங்கள் பார்த்திருக்கிறோம், நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். வரும் போட்டிகளில் அவர் பெரிய ஸ்கோரைப் அடைவார். அவர் ஒரு அச்சமற்ற பேட்டர் ஆவார். அவர் பிரையன் லாராவால் அதிகம் கவரப்பட்டிருப்பதாக மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். ஆனால் அவர் யுவராஜ் சிங் மற்றும் பிரையன் லாராவின் கலவை. அவரது ஆக்ரோஷம் யுவராஜைப் போலவே இருக்கிறது” என்றார்.
Vaibhav Suryavanshi: டிராவிட் அளிக்கும் ஆதரவு
தொடர்ந்து, போட்டிக்கு முந்தைய நாள் தான் லக்னோவுக்கு எதிராக விளையாடப்போகிறோம் என்பதே சூர்யவன்ஷிக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவரது பயிற்சியாளர் ஓஜா கூறுகையில்,”அவர் (சூர்யவன்ஷி) மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். நேற்று தனது வலைப்பயிற்சிக்கு பிறகு அவர் என்னை அழைத்திருந்தார். லக்னோ போட்டிக்கு எதிராக களமிறக்கப்பட உள்ளதாக டிராவிட் மற்றும் அணி நிர்வாகத்தினர் தெரிவித்ததாக கூறி அவர் மகிழ்ச்சியடைந்தார்.
ஆனால் பதற்றமாக இருந்தார். நிதானமாக இரு என அவரிடம் கூறினேன். முன்பு இருந்ததை போலவே விளையாடுங்கள் என்று சொன்னேன். அவரோ, பந்து சிக்ஸருக்கு அடிக்கும்படி வந்தால் தயங்க மாட்டேன் என கூறினார். அவர் ஒரு சிறுவன். அவர் உணர்ச்சிவசப்படுபவர். அவர் எப்போதும் ராகுல் டிராவிட் சார் மற்றும் அவரது ஆதரவை குறித்து என்னிடம் பேசுவார். அவர் அவரை ஒரு கடவுளைப் போல மதிக்கிறார். டிராவிட் சார் எப்போதும் அவருக்கு ஆதரவளிக்க இருக்கிறார்” என்றார்.