சென்னை: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நேற்று நடந்த விழாவில், கலைஞர் கைவினை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 8,951 கைவினை தொழில் முனைவோருக்கு ரூ.34 கோடி மானியத்துடன், ரூ.170 கோடிக்கான கடன் ஒப்புதல் ஆணைகளைவழங்கினார். புவிசார் குறியீடு பெறுவதற்கான அரசு மானியம் ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என்பது உட்பட 5 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று நடைபெற்ற விழாவில், கலைஞர் கைவினை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அத்துடன் 8,951 பயனாளிகளுக்கு ரூ.34 கோடி மானியத்துடன், ரூ.170 கோடிக்கான கடன் ஒப்புதல் ஆணைகளையும் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ரூ.7.29 கோடியில் நிறுவப்பட்டுள்ள பேராவூரணி கயிறு குழுமம், ராமநாதபுரம் மாவட்டம் வசந்த நகரில் ரூ.6.72 கோடியில் நிறுவப்பட்டுள்ள நகை உற்பத்தி குழுமம், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ரூ.1.15 கோடியில் நிறுவப்பட்டுள்ள மகளிர் எம்ப்ராய்டரிங் குழுமம் ஆகியவற்றை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
பின்னர், 2023-24-ம் ஆண்டுக்கான மாநில அளவில் சிறந்த குறுந்தொழில் நிறுவனத்துக்கான விருதை திருச்சி டிஜிட் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனத்துக்கும், சிறந்த மகளிர் நடுத்தர தொழில் நிறுவனத்துக்கான விருதை காஞ்சிபுரம் கிரியா மெடிக்கல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கும், சிறந்த மகளிர் சிறுதொழில் நிறுவனத்துக்கான விருதை திண்டுக்கல் பிஆர்எஸ். டெய்ரி நிறுவனத்துக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 5 புதிய அறிவிப்புகள் அறிவுசார் சொத்துரிமையான ‘புவிசார் குறியீடு’ பெறுவதற்காக வழங்கப்படும் மானியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் வாகன மற்றும்பொறியியல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அளவியல், உலோகவியல் ஆய்வகங்கள் ரூ.5 கோடியில் அமைக்கப்படும்.
தொழில் நிறுவனங்கள் மிகுதியாக உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் பழந்தண்டலத்தில் ரூ.5 கோடியில் சாலை கட்டமைப்பு, மழைநீர் வடிகால் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் உற்பத்தியாளர்கள் தொழிற்பேட்டையில், தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி மையம், இயந்திர தளவாடங்கள் கூடிய பொது வசதி மையம் ரூ.3.90 கோடியில் ஏற்படுத்தப்படும்.
குறு, சிறு தொழில் நிறுவனங்கள்: உள்நாட்டில் வர்த்தக கண்காட்சிகள், நிகழ்வுகளில் பங்கேற்க வழங்கப்படும் காட்சிக்கூட கட்டணத்துக்கான நிதியுதவி, ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.
விழாவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு,செல்வம், எம்எல்ஏக்கள் செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ்.பாலாஜி, வரலட்சுமி, எம்.பாபு, இ.கருணாநிதி, எஸ்.ஆர். ராஜா,தலைமைச் செயலர் நா. முருகானந்தம், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அதுல் ஆனந்த், தொழிலாளர் நலத் துறை செயலர் வீரராகவ ராவ், தொழில் துறை ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் நிர்மல்ராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
உற்சாக வரவேற்பு: முன்னதாக, போரூர் முதல் குன்றத்தூர் வரை சாலையின் இருபுறமும் தொண்டர்கள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து, முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களை பார்த்ததும் காரில் இருந்து இறங்கிய முதல்வர்,அவர்களுடன் உற்சாகமாக கைகுலுக்கினார். மனுக்களையும் பெற்றுக் கொண்டார். வழிநெடுகிலும் வண்ண மலர்,காய்கறி, பழ தோரணங்களை திமுகவினர் அமைத்திருந்தனர்.
நாடு முழுவதும் கைவினை கலைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கும் பிரதமமந்திரி விஸ்வகர்மா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2023-ல் அறிமுகம் செய்தது. தமிழக அரசின் சமூக நீதி கோட்பாடுகளுக்கு எதிராக இருக்கும் இந்த திட்டத்துக்கு மாற்றாக, கலைஞர் கைவினை திட்டத்தை தமிழக அரசு அறிவித்து, அரசாணை வெளியிட்டது.