கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று விட்டு, பாம்புக்கடி என பழி போட்ட மனைவி

மீரட்,

உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் அக்பர்பூர் சாதத் கிராமத்தில் வசித்து வந்தவர் அமித் காஷ்யப் என்ற மிக்கி (வயது 25). இவருடைய மனைவி ரவீடா. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், கட்டிலில் பாம்பு கடித்ததில் மிக்கி உயிரிழந்து கிடந்துள்ளார். கதறியழுதபடி இருந்த மனைவி ரவீடா உறவினர்களிடம், மிக்கியை கொடிய பாம்பு கடித்து விட்டது என்றும் அதில் அவர் உயிரிழந்து விட்டார் என்றும் கூறியுள்ளார்.

ஆனாலும், அந்த பகுதி மக்கள் மிக்கியின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ரவீடா, கள்ளக்காதலரான அமர்தீப் என இருவரும் சேர்ந்து சம்பவத்தன்று, மிக்கியை கொலை செய்துள்ளனர்.

ரவீடா கணவரின் கைகளை பிடித்து கொண்டதுடன், கத்தி விடாமல் இருக்க வாயையும் பொத்தியுள்ளார். பின்னர் அமர்தீப் மற்றும் ரவீடா இருவரும் சேர்ந்து, துணியை கழுத்தில் இறுக்கி, மிக்கியை கொலை செய்தனர். மிக்கி உயிரிழந்ததும், கொடிய பாம்பை அவருடைய உடலில் பல்வேறு முறை கடிக்க விட்டுள்ளனர்.

இதற்காக, ரூ.1,000 கொடுத்து அந்த பாம்பை அமர்தீப் கொண்டு வந்துள்ளார். இந்த கொலை பற்றி ரவீடா போலீசாரிடம் கூறும்போது, அடிக்கடி கணவர் மிக்கி அடித்து துன்புறுத்தினார் என கூறினார். பாலியல் தொழிலில் தள்ளி விடுவேன் என மிரட்டினார். இதனால், அமர்தீப்புடன் சேர்ந்து கொலை செய்தேன் என கூறினார்.

ஆனால், ஓராண்டாக இருவரும் கள்ளக்காதலில் இருந்ததும், மிக்கி வீட்டுக்கு அடிக்கடி அமர்தீப் வந்து சென்றதும், கிராமத்தினர் இடையே சந்தேகம் எழுப்பியது. சமீபத்தில் இதுபற்றி தெரிய வந்ததும் அதிர்ச்சியடைந்த மிக்கி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால், மிக்கியை கொலை செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக கூகுள் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் கொலையை கண்டுபிடிக்க முடியாதபடி செய்வது பற்றிய விசயங்களை தேடியுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

இதன்பின்னர், பாம்புக்கடியால் மிக்கி இறந்ததுபோன்று காட்ட அவர்கள் முயன்றனர். 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். கிராமவாசிகள் தொடக்கத்தில் இருந்து சந்தேகம் தெரிவித்த நிலையில், இந்த வழக்கின் உண்மையை போலீசார் கண்டறிந்து உள்ளனர். ரவீடாவுக்கு திருமணம் நடந்து 8 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த மார்ச்சில், மீரட்டில் கடற்படை அதிகாரி சவுரப் ராஜ்புத், மனைவி முஸ்கான் மற்றும் கள்ளக்காதலர் சாஹில் சுக்லாவால் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொல்லப்பட்டார். இதன்பின்னர், அவரை பல முறை கத்தியால் குத்தி உடலை வெட்டி முஸ்கான் டிரம்மில் அடைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.