கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால், கூலி உயர்வு பிரச்சினை தொடர்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் 2022-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த கூலியில் மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கணக்கில் கொண்டு கூலி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடந்தது. முடிவில் சோமனூர் ரகத்திற்கு 15 சதவீதம், இதர ரகங்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த கூலி உயர்வை விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஏற்று கொண்டு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பூபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 33 நாட்களாக புதிய நியாயமான கூலி உயர்வு கோரி விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உண்ணாவிரதம் நடைபெற்று வந்தது. அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது. சோமனூர் ரகத்திற்கு 15 சதவீதம், இதர ரகங்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்று உண்ணாவிரதம் உடனடியாக கைவடுகிறோம். பொதுக்குழு கூடி முறைப்படி வேலை நிறுத்த போராட்டமும் வாபஸ் பெறப்படும். என்றார்.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறும் போது, ஒரு மாத காலம் நடைபெற்று வந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது.என்றார். கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட பலர் பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.